உழவர் சந்தையில் விவசாயிகள் தர்ணா
தாராபுரம், தாராபுரம் பஸ் ஸ்டாண்ட் அருகில் உழவர் சந்தை இயங்குகிறது. தாராபுரம் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த, 200க்கும் மேற்பட்ட விவசாயிகள், அடையாள அட்டை பெற்று காய்கறி வியாபாரம் செய்கின்றனர்.உழவர் சந்தைக்கு செல்லும் வழிகளில், நடைபாதை வியாபாரிகள் கடை அமைத்து காய்கறி விற்பதால் உழ வர் சந்தையில் வியாபாரம் பாதித்தது. இது தொடர்பாக விவசாயிகள் ஏற்கனவே போராட்டம் நடத்தினாலும் பலனில்லை. இந்நிலையில் நேற்று அதிகாலை, 5:00 மணியளவில், உழவர் சந்தைக்கு காய்கறி கொண்டு வந்த நுாற்றுக்கும் மேற்பட்ட விவசாயிகள், காய்கறிகளை வியாபாரம் செய்ய மறுத்து, நடைபாதை வியாபாரத்தை தடுக்க கோரி, காய்கறிகளை தரையில் கொட்டி, தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் உழவர் சந்தை வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டது. தாராபுரம் போலீசார் சமரச பேச்சுவார்த்தை நடத்தினர்.இதைதொடர்ந்து தாராபுரம் தாலுகா அலுவலகத்தில் தாசில்தார் திரவியம் முன்னிலையில், பேச்சுவார்த்தை நடந்தது. இதில் காலை, 9:00 மணி வரை, உழவர் சந்தை பகுதியில், நடைபாதை வியாபாரிகள், வியாபாரம் செய்ய தடை விதிப்பதாக அதிகாரிகள் கூறியதை ஏற்றுக் கொண்டு விவசாயிகள் போராட்டத்தை கைவிட்டனர்.