| ADDED : ஏப் 11, 2024 07:35 AM
பவானி : மேட்டூர் அணையின், வலது கரை பாசனத்தின் கடைமடை பகுதிகளுக்கு தண்ணீர் வரவில்லை எனக் கூறி, விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட முயற்சித்தால் பரபரப்பு ஏற்பட்டது.மேட்டூர் வாய்க்கால் பாசன பகுதிகளில் வறட்சி நிலவுவதால், குடிநீர் தேவையை கருத்தில் கொண்டு, அணையிலிருந்து தண்ணீர் திறக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்து வந்தனர். இதையடுத்து கடந்த மாதம் வினாடிக்கு, 200 கன அடி வீதம் வலது மற்றும் இடது கரை பாசன பகுதிகளுக்கு, 15 நாட்களுக்கு தண்ணீர் திறக்கப்பட்டது.இந்நிலையில், கடைமடை பகுதிகளுக்கு தண்ணீர் வரவில்லை எனக் கூறி, நேற்று பவானி அருகே மூன்ரோடு பகுதியில் திரண்ட விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபடுவதாக தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த பவானி டி.எஸ்.பி., அமிர்தவர்ஷினி, பவானி தாசில்தார் தியாகராஜ், இன்ஸ்பெக்டர் தாமோதரன் மற்றும் நீர்வள ஆதாரத்துறை அலுவலர்கள், விவசாயிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.அதே நேரம், மறியல் போராட்டத்தில் ஈடுபட்டால் கைது நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் விவசாயிகளுக்கு எச்சரிக்கை விடுத்தனர். இதையடுத்து, மேட்டூர் வலதுகரை வாய்க்கால் பகுதிக்கு விவசாயிகளுடன் சென்ற அதிகாரிகள் ஆய்வு செய்தனர். விவசாயிகளின் தேவை குறித்து முறையாக மனு அளித்தால், அரசின் கவனத்துக்கு கொண்டு சென்று உரிய நடவடிக்கை எடுப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர். இதையடுத்து, விவசாயிகள் தரப்பில் மேலும் 15 நாட்களுக்கு தண்ணீர் திறக்குமாறு கோரிக்கை மனு அளிக்கப்பட்டதை தொடர்ந்து கலைந்து சென்றனர்.