விவசாயி வீட்டில் திருடியவழக்கில் 3 பேர் கைதுகோபி: திங்களூர் அருகே நல்லாம்பட்டியை சேர்ந்த விவசாயி சென்னியப்பன், 67; இவர் வீட்டில் கடந்த பிப்.,2ல், 17 பவுன் நகை மற்றும் இரண்டு லட்சம் ரூபாய் திருட்டு போனது. திங்களூர் போலீசார் குற்றவாளிகளை தேடி வந்தனர். இது தொடர்பாக சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்த ராஜ்குமார், 25, பிரவீன், 27, ரஜ்ஜித்குமார், 23, ஆகியோரை நேற்று கைது செய்தனர். மூவரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி பெருந்துறை கிளை சிறையில் அடைத்தனர். அவர்களிடம் இருந்து, 12 பவுன் நகைகளை பறிமுதல் செய்தனர். இலவச வீட்டுமனைபட்டா கோரி மனுஈரோடு: கோபியை அடுத்த கடுக்காம்பாளையம், பொலவபாளையம், பெரியார் நகர் பகுதி மக்கள், ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில், நேற்று மனு வழங்கி கூறியதாவது: நாங்கள், 40 ஆண்டுகளுக்கு மேலாக இப்பகுதியில் வசிக்கிறோம். அனைவரும் விவசாய கூலி தொழிலாளர்கள். எங்களுக்கு சொந்தமாக நிலம், வீடு இல்லை. எனவே, கோபி தாலுகாவுக்கு உட்பட்ட கோட்டுப்புள்ளாம்பாளையம் கிராமம், பொலவக்காளிபாளையம் பகுதியில் அரசு புறம்போக்கு நிலத்தில் இலவச வீட்டுமனை பட்டா, எங்களுக்கு வழங்க வேண்டும். இவ்வாறு தெரிவித்துள்ளனர்.குறைதீர் கூட்டத்தில்325 மனுக்கள் ஏற்புஈரோடு: ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்த மக்கள் குறைதீர் கூட்டத்துக்கு கலெக்டர் ராஜகோபால் சுன்கரா தலைமை வகித்தார். முதியோர் உதவித்தொகை, தொழில் கடன், குடிநீர் வசதி, சாலை வசதி உட்பட பல்வேறு கோரிக்கை தொடர்பாக, 325 மனுக்கள் பெறப்பட்டன. அவற்றை, அந்தந்த துறை விசாரணைக்காக அனுப்பி வைத்தனர். முதல்வரின் தனிப்பிரிவு, அமைச்சர்கள் மூலம் பெறப்பட்டு வந்த மனுக்களுக்கு முக்கியத்துவம் வழங்கி தீர்வு காண அதிகாரிகளுக்கு யோசனை தெரிவிக்கப்பட்டது.ஊதிய ஒப்பந்தம் கோரிதாசில்தாரிடம் மனுசத்தி,-சத்தியமங்கலம் ஜீவா சுமை துாக்கும் தொழிலாளர் சங்கம் சார்பில், ஏ.ஐ.டி.யு.சி., தொழிற்சங்க தலைவர் ஸ்டாலின் சிவக்குமார் தலைமையில், சத்தி தாசில்தார் மாரிமுத்துவிடம், நேற்று மனு வழங்கப்பட்டது. மனு விபரம்: சத்தியமங்கலத்தில் உள்ள சந்தை கடைகள், கிடங்குகள் மற்றும் நிறுவனங்களில், 250க்கும் மேற்பட்ட சுமை துாக்கும் தொழிலாளர் பணியில் ஈடுபட்டுள்ளனர். அனைவரும் ஜீவா சுமை துாக்கும் தொழிலாளர் சங்கத்தில் உறுப்பினராக உள்ளனர்.இவர்களுக்கான கூலி, சத்தி அனைத்து வியாபாரிகள் சங்கம், அனைத்து வணிகர் சங்க நிர்வாகிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி, அன்றைய தாசில்தார் முன்னிலையில், மூன்று ஆண்டுகளுக்கு முன் ஒப்பந்தம் போடப்பட்டது. இந்த ஒப்பந்தம், 2023 டிச., ௯ம் தேதியுடன் முடிந்து விட்டது. இதுவரை புதிய ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தை மேற்கொள்ளப்படவில்லை. தாசில்தார் தலையிட்டு வணிகர் மற்றும் தொழிற்சங்க பிரதிநிதிகளை அழைத்து, புதிய ஊதிய உயர்வு ஒப்பந்தத்தை ஏற்படுத்த வேண்டும். இவ்வாறு மனுவில் தெரிவித்துள்ளனர்.டாஸ்மாக் கடைக்கு எதிர்ப்புதாராபுரம் அருகே மறியல்தாராபுரம்-தாராபுரம் அருகே டாஸ்மாக் கடைக்கு எதிர்ப்பு தெரிவித்து, மக்கள் மறியலில் ஈடுபட்டனர்.தாராபுரத்தை அடுத்த தேர்பாதையில் இருந்த டாஸ்மாக் கடை, மக்கள் எதிர்ப்பால் காலி செய்யப்பட்டது. இந்த கடையை சின்னமோளரபட்டிக்கு மாற்ற, அதிகாரிகள் ஏற்பாடு செய்தனர். இதற்கு சின்ன மோளரப்பட்டி மக்கள் எதிர்ப்பு தெரிவித்து, நேற்று மதியம் சாலை மறியலில் ஈடுபட்டனர். குண்டடம் போலீசார் மக்களை சமரசம் செய்து கலைந்து போக செய்தனர். 3 மணி நேரம் நடந்த மறியலால், போக்குவரத்து கடுமையாக பாதித்தது.மோடியின் உத்தரவாதம்பா.ஜ.,வினர் கருத்து கேட்புதிருப்பூர்-திருப்பூரில் பிரதமர் மோடி அரசின் உத்தரவாதம் என்ற தலைப்பில் மக்களிடம் பா.ஜ., வினர் கருத்து கேட்டனர்.திருப்பூர் வடக்கு மாவட்ட பா.ஜ., சார்பில், திருப்பூர் தெற்கு தொகுதிக்கு உட்பட்ட பகுதியில் 'வளர்ச்சி அடைந்த பாரதம் மோடி அரசின் உத்தரவாதம்' என்ற தலைப்பில் மக்களிடம் தேர்தல் தொடர்பான கருத்துக்களை பெறும் வகையில் நிகழ்ச்சி திருப்பூர் மத்திய பஸ் ஸ்டாண்டில் நேற்று மாலை நடந்தது. இதில், பொதுமக்கள் பலரும், தங்களது கோரிக்கைகளை எழுதி, அங்கிருந்த பெட்டியில் செலுத்தினர். மாவட்ட தலைவர் செந்தில்வேல் தலைமையில் மாநில செயலாளர் மலர்க்கொடி, துணை தலைவர்கள் தங்கராஜ், ஈஸ்வரன், மாவட்ட செயலாளர் கவுதம் உட்பட பலர் பங்கேற்றனர்.