ஈரோடு : சுலப தவணைகளில், வீட்டுமனை தருவதாக கூறி ஈரோட்டில் உள்ள ப்ரோமோட்டர்ஸ் நிறுவனம், 31 பேரிடம், 20 லட்சம் ரூபாய்க்கு மேல் பெற்று மோசடி செய்ததாக, ஈரோடு எஸ்.பி., அலுவலகத்தில் புகார் மனு அளிக்கப்பட்டது.ஈரோடு மாவட்டம், நசியனுார் ஆட்டையாம்பாளையத்தை சேர்ந்த சீனிவாசன், 47, என்பவர் ஈரோடு எஸ்.பி., அலுவலகத்தில் நேற்று அளித்த புகார் மனு: சுலப தவணைகளில் வீட்டுமனை தருவதாக கூறி, ஸ்ரீ சக்தி ப்ரோமோட்டர்ஸ் நிறுவனத்தினர் என்னை அணுகினர். ஈரோட்டில் தலைமை அலுவலகம் உள்ளது. கோபி தாலுகா, சிறுவலுாரில் ஸ்ரீசக்தி நகர் என்ற பெயரில், 1,200 ச.அடி காலி மனை விற்பனை செய்கிறோம். சுலப தவணைகளில் விற்கிறோம் என கூறினர். இதை நம்பி என் மகன் பெயரில், 60 மாதங்களில் மொத்தம், 59 ஆயிரம் ரூபாய் செலுத்தி உள்ளேன். 2021 செப்.,26ல் நிலம் குலுக்கல் நடந்தது. 3 மாதங்கள் கழித்து, 20 ஆயிரம் செலுத்தி நிலத்தை கிரயம் செய்து கொள்ளலாம் என்றனர். நான் 2021 டிச.,30ல் ஈரோடு பாரதி தியேட்டர் அருகேயுள்ள ஸ்ரீ சக்தி ப்ரோமேட்டர்ஸ் அலுவலகம் சென்று நேரில் கேட்டேன். டி.டி.சி.பி., அப்ரூவல் வரவில்லை. வந்தவுடன் அழைக்கிறேன் என்று கூறினர்.பின்னர் டி.டி.சி.பி.அப்ரூவல் பெற, 72 ஆயிரம், கிரய செலவிற்கு, 20 ஆயிரம் என மொத்தம், 92 ஆயிரம் ரூபாயை உடனடியாக செலுத்த வேண்டும். இல்லையெனில் கிரயம் இல்லை. கால தாமதமானால் கூடுதல் செலவாகும் என்றனர். கடந்த ஏப்.,11ல் மீண்டும் ஸ்ரீ சக்தி ப்ரோமோட்டர்ஸ் அலுவலகம் சென்று கேட்ட போது, 1 லட்சத்து, 60 ஆயிரம் ரூபாய் செலுத்த வேண்டும் என்றனர். என்னால் பணம் கட்ட முடியாது. ஏற்கனவே கொடுத்த பணத்தை திருப்பி கொடுங்கள் என கேட்டேன். அப்போது அதன் உரிமையாளர் வடிவேல், தகாத வார்த்தை பேசி கொலை மிரட்டல் விடுத்தார். என் பணத்தை மீட்டு தர வேண்டும்.இவ்வாறு கூறியுள்ளார்.இவரை போல மேலும், 30 பேர் மொத்தம், 20 லட்சம் ரூபாய் செலுத்தி உள்ளனர். வீட்டு மனையும் கிடைக்கவில்லை. கொடுத்த பணமும் திரும்ப கிடைக்கவில்லை. அவர்களும் எஸ்.பி., அலுவலகத்தில் மனு கொடுத்தனர்.