கோவில் நிலங்களில் வசிக்கும் ஏழை குடியிருப்பாளர்கள் குத்தகை தொகையை குறைக்க அரசு முயற்சி; அமைச்சர்
ஈரோடு :''நீதிமன்ற உத்தரவுப்படி, கோவில் நிலங்களை மற்றவர்களுக்கு வழங்க இயலாது. அந்நிலத்தில் வசிப்போருக்கும் பட்டாவாக வழங்குவது கடினம். இருப்பினும், அரசின் வழிகாட்டுதல் மதிப்பின் அடிப்படையில் குடியிருப்பாளர்களுக்கு, நிலத்தை குத்தகை அடிப்படையில் வழங்க அரசு திட்டமிட்டுள்ளது,'' என, அமைச்சர் முத்துசாமி தெரிவித்தார்.ஈரோடு அருகே பெருமாள்மலை கோவிலுக்கு சொந்தமான, 6 ஏக்கர் நிலத்தில், 200க்கும் மேற்பட்ட மக்கள் குடியிருக்கின்றனர். இவர்களில், 100க்கும் மேற்பட்டோர் இலங்கையில் இருந்து தாயகம் திரும்பியவர்கள். கடந்த பல ஆண்டுகளாக வசிக்கும் இவர்கள், தங்களுக்கு அவ்விடத்தில் பட்டா வழங்க வலியுறுத்தி வருகினறனர்.இந்நிலையில் அறநிலையத்துறை சார்பில் நோட்டீஸ் வழங்கி, இடத்தை காலி செய்ய வேண்டும் அல்லது உரிய குத்தகை (வாடகை) தொகை செலுத்த தெரிவித்துள்ளனர்.இது தொடர்பாக ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில் கலெக்டர் கந்தசாமி, டி.ஆர்.ஓ., சாந்தகுமார் முன்னிலையில் கலந்தாலோசனை கூட்டம் நேற்று நடந்தது. இதில் குடியிருப்புதாரர்களும் பங்கேற்றனர். கூட்டத்தில் பங்கேற்ற வீட்டு வசதித்துறை அமைச்சர் முத்துசாமி, நிருபர் களிடம் கூறியதாவது:தற்போது கோவிலுக்கு சொந்த மான நிலம், ஒரு காலத்தில் ஒரு கொடையாளரால் கோவிலுக்கு நன்கொடையாக வழங்கப்பட்டது. அறநிலையத்துறை நிலமாக தற்போது உள்ளது.நீதிமன்ற உத்தரவுப்படி, கோவில் நிலங்களை மற்றவர் களுக்கு வழங்க இயலாது. அந்நிலத்தில் வசிப்போருக்கும் பட்டாவாக வழங்குவது கடினம். இருப்பினும், அரசின் வழிகாட்டுதல் மதிப்பின் அடிப்படையில் குடியிருப்பாளர்களுக்கு, நிலத்தை குத்தகை அடிப்படையில் வழங்க அரசு திட்டமிட்டுள்ளது.குத்தகை காலம், 3 ஆண்டு களாகும். 3 ஆண்டுக்கு ஒரு முறை குத்தகை தொகை திருத்தி, 15 சதவீதம் உயர்த்தி உத்தரவிடும். இதுபற்றி அமைச்சர் சேகர்பாபு, அரசுக்கு முன்மொழிவு அனுப்பி உள்ளார். அதில் குத்தகைத்தொகை, 15 சதவீதத்தை குறைத்து வழங்க முயன்றுள்ளார். இதுபற்றி முதல்வர் முடிவெடுப்பார். இங்கு, 30 ஆண்டாக வசிப்பதால், 30 ஆண்டுக்கு குத்தகை தொகை செலுத்த நேரிடும். அவ்விதியையும் தளர்த்த கேட்டுள்ளோம். ஒருவேளை தளர்வு செய்ய இயலாத நிலையில், இவர் களுக்கு வேறு இடத்தை தேர்வு செய்யவும் திட்டமிட்டுள்ளோம். இக்கோவில் நிலத்தில் முன்பு, 558 பேர் வசித்தனர். அவர்களில் பலருக்கு பட்டா வழங்கப்பட்டுள்ளது. மற்றவர்களுக்கு மாற்று இடம் வழங்க முயற்சி மேற்கொள்ளப்படும்.இவ்வாறு அமைச்சர் கூறினார்.