நம்பியூர் : நம்பியூர் பகுதியில் மூன்று நாட்களாக இரவில் கொட்டிய கனமழையால், பல இடங்களில் சாலை வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டு, போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது. குளக்கரை உடைந்து, ஊருக்குள் வெள்ளம் புகுந்தது.நம்பியூர் மற்றும் சுற்றியுள்ள மலையப்பாளையம், எம்மாம்பூண்டி, வேமாண்டம்பாளையம், சாவக்கட்டு பாளையம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில், கடந்த மூன்று நாட்களாகவே இரவில் விடிய விடிய கனமழை பெய்து வருகிறது. முதல் நாள் மழைக்கே நம்பியூர் மற்றும் சுற்றியுள்ள பல்வேறு பகுதிகளில், 20க்கும் மேற்பட்ட குளங்கள் நிரம்பி உபரி நீர் வெளியேறி வந்தது. நேற்று முன்தினமும் அதை தொடர்ந்து நேற்றிரவும் மூன்றாவது நாளாக, 4 மணி நேரம் கனமழை பெய்தது.ஏற்கனவே குளங்கள் நிரம்பிய நிலையில், வரத்தான நீர் உபரி நீர் முழுமையாக வெளியேறியது. இதனால் நம்பியூர் பஸ் ஸ்டாண்ட், அதை சுற்றியுள்ள பெரியார் நகர், சி.எஸ்.ஐ., வீதி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் வெள்ள நீர் புகுந்தது. பெரியார் நகரில், 50க்கும் மேற்பட்ட வீடுகளுக்குள் மழை நீர் புகுந்தது. இங்கிருந்த மக்கள் மீட்கப்பட்டு பள்ளி, சமுதாய கூடத்தில் தங்க வைக்கப்பட்டனர். மழை நீர் வீடுகளுக்குள் புகுந்ததால் பல லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்கள் மழை நீரில் மூழ்கி விட்டன.இதேபோல் நம்பியூர் பஸ் ஸ்டாண்டுக்குள் புகுந்த வெள்ளம், அருகில் உள்ள வணிக நிறுவனங்கள், கடைகளுக்குள் புகுந்தது. பஸ் ஸ்டாண்ட் முன், 3 அடி உயரத்துக்கு தண்ணீர் சென்றதால், கோபி -- கோவை சாலையில் போக்குவரத்து துண்டிக்கப்பட்டது. இந்நிலையில் செட்டியாம்பதி குளத்தில் இருந்து அதிக தண்ணீர் வெளியேறியதால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மீட்பு பணிக்கு, நம்பியூர் மற்றும் சத்தி பகுதியில் இருந்து தீயணைப்பு வீரர்கள் வரவழைக்கப்பட்டனர்.இடிந்த வீடுகள்கனமழையால் நம்பியூர், பெரியார் நகரில் பாக்கியம்மாள் என்பவரது வீடும், செட்டியம்பதியில் பூவாத்தாள் என்பவரது வீடும் இடிந்து விழுந்தது. அதிர்ஷ்டவசமாக வீட்டில் யாருமில்லாததால் உயிர் சேதம் தவிர்க்கப்பட்டது.மண் அரிப்புவரப்பாளையத்தில் உள்ள பெரியகுளம் முழு கொள்ளளவை எட்டியது. இதனால் கரையின் ஒரு பகுதியில் மண்ணரிப்பு ஏற்பட்டது. பொதுப்பணி துறையினர் மணல் மூட்டைகளை அடுக்கி அரிப்பை சரி செய்தனர். மலையப்பாளையம் அரசு மேல்நிலைப்பள்ளி சுற்றுச்சுவர் கனமழையால் இடிந்து விழுந்தது. நம்பியூர்-கெடாரை சாலையில் பழனிக்கவுண்டன்புதுார் என்ற இடத்தில் குளக்கரை உடைந்து, தண்ணீர் வெளியேறியது. இதனால் நம்பியூர்-கெடாரை சாலை முழுமையாக சேதமடைந்தது. இரு கிராமங்களுக்கும் போக்குவரத்து துண்டிக்கப்பட்டது. அதேபோல் அழகம்பாளையம்-எம்மாம்பூண்டி சாலையும் முழுமையாக சேதமாகி போக்குவரத்து தடைபட்டது.சேதமான பகுதிகளை கோபி தாசில்தார் கண்ணப்பன், நம்பியூர் தாசில்தார் மாலதி, நம்பியூர் பேரூராட்சி தலைவர் செந்தில்குமார் உள்ளிட்டோர் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.