உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / அந்தியூரில் லட்டு-ஜிலேபிக்கு கிராக்கி பட்டாசு, ஜவுளி விற்பனை ஜோரு

அந்தியூரில் லட்டு-ஜிலேபிக்கு கிராக்கி பட்டாசு, ஜவுளி விற்பனை ஜோரு

அந்தியூர், தீபாவளியை முன்னிட்டு, பட்டாசு, இனிப்பு, காரம் மற்றும் துணிக்கடைகளில் விற்பனை, அந்தியூரில் நடப்பாண்டு அதிகரித்ததால், வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.அந்தியூர் மற்றும் தவிட்டுப்பாளையத்தில் ஆறு நிரந்தர பட்டாசு கடைகள் உள்ளன. நடப்பாண்டு ஐந்து தற்காலிக பட்டாசு கடைகளுக்கு அனுமதி கிடைத்தது. தீபாவளிக்கு இரண்டு நாள் முன் பட்டாசு கடைகள் திறக்கப்பட்டன. 'வெரைட்டி' பட்டாசுகளுக்கு 'ஆபர்' வழங்கப்பட்டு விற்பனை நடந்தது. அனைத்து வெரைட்டிகளும் உள்ளடக்கிய பட்டாசு பாக்ஸ், 450 ரூபாய் முதல், ௨,௦௦௦ ரூபாய் வரை விலை போனது. அவ்வப்போது மழை துாறல் விட்டுவிட்டு வந்தாலும், பட்டாசு வாங்கும் மக்களின் ஆர்வம் குறையவில்லை. நேற்று மதியம் வரை பட்டாசு கடைகளில் கூட்டம் காணப்பட்டது. ஒரு சில பிராண்ட் வெடிகள் மதியமே தீர்ந்ததால், பலர் ஏமாற்றத்துடன் திரும்பினர். கடந்தாண்டை விட பட்டாசு விற்பனை அதிகம் என விற்பனையாளர்கள் கூறினர்.இதேபோல் சிங்கார வீதி, தேர்வீதி, பஸ் ஸ்டாண்ட், பவானி ரோடு, பர்கூர் ரோடு மற்றும் தவிட்டுப்பாளையத்தில் உள்ள துணிக்கடைகளில், நேற்று முன்தினம் கூட்டம் அதிகரித்தது. நேற்று பெரியளவில் கூட்டம் இல்லை. ஒரு சில துணிக்கடைகளில் இலவசம் என அறிவித்ததால், நேற்று முன்தினம் இரவு கூட்டம் அலைமோதியது. இதேபோல் தவிட்டுப்பாளையத்தில் உள்ள ஸ்வீட்ஸ் கடைகள், பேக்கரிகளில், நேற்று முன்தினம் மதியம் முதல் இரவு வரை, இனிப்பு-காரம் வாங்க கூட்டம் அலைமோதியது. பெரும்பாலான மக்களின் தேர்வு லட்டு மற்றும் ஜிலேபியாக இருந்தது. இதனால் இரண்டும் சீக்கிரமே விற்றுத் தீர்ந்து கிராக்கியும் ஏற்பட்டது. ஆக பட்டாசு, துணி, இனிப்பு-காரம் என மூன்றின் விற்பனையும் கடந்தாண்டை காட்டிலும் இந்தாண்டு திருப்திகரமாக இருந்ததாக, வியாபாரிகள் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ