7,615 மாற்றுத்திறனாளிகளுக்கு மாதம் ரூ.1.5 கோடி உதவித்தொகை
ஈரோடு :ஈரோடு மாவட்டத்தில், 7,615 மாற்றுத்திறனாளிகளுக்கு மாதந்தோறும், 1.5 கோடி ரூபாய் பராமரிப்பு உதவித்தொகை வழங்கப்படுகிறது.மாற்றுத்திறனாளிகள் நலத்துறை மூலம், மாற்றுத்திறனாளிகளுக்கு பல்வேறு நலத்திட்ட உதவி, மாதாந்திர பராமரிப்பு தொகை வழங்கப்படுகிறது. இதன்படி ஈரோடு மாவட்டத்தில் கடந்த, நான்காண்டுகளில் மாற்றுத்திறனாளிகளை திருமணம் செய்த சாதாரண நபர்கள், 57 பேருக்கு திருமண உதவித்திட்டத்தில், 21.50 லட்சம் ரூபாய் வழங்கப்பட்டுள்ளது. சிறப்பு முகாம் நடத்தி, 13,677 மாற்றுத்திறனாளிகள் கண்டறியப்பட்டு அடையாள அட்டை வழங்கப்பட்டுள்ளன. தனித்துவம் வாய்ந்த அடையாள அட்டை, 13,154 மாற்றுத்திறனாளிகள் பெற்றுள்ளனர். கல்வி, சிகிச்சை, வேலை வாய்ப்பு போன்றவைகளுக்கு எளிதில் சென்று வர, 1,374 பேருக்கு இலவச பஸ் பாஸ் வழங்கப்பட்டுள்ளன. சக்கர நாற்காலிகள், இணைப்பு சக்கரம் பொருத்தப்பட்ட பெட்ரோல் ஸ்கூட்டர், பேட்டரி வீல் சேர், காதொலி கருவி என, 23 வகை உதவி உபகரணங்கள், 1.51 லட்சம் ரூபாய் மதிப்பில், 2,483 பேருக்கு வழங்கப்பட்டுள்ளது. கடுமையாக பாதித்தோர், மனவளர்ச்சி குன்றியோர், தொழு நோய் பாதித்தோர், புற உலக சிந்தனையற்றவர், தசை சிதைவு நோய் பாதித்தோருக்கான பராமரிப்பு உதவித்தொகை மாதம், 2,000 ரூபாய் வழங்கப்படுகிறது. இத்திட்டத்தில் மாதம், 7,615 மாற்றுத்திறனாளிகளுக்கு, 1.52 கோடி ரூபாய் உதவித்தொகையாக வழங்கப்படுகிறது.உயர் ஆதரவு தேவைப்படும் மாற்றுத்திறனாளிகள், தங்கள் உதவியாளரை வைத்து கொள்ள ஏதுவாக மாதம், 1,000 ரூபாய் உதவித்தொகை வழங்கப்படுகிறது. இத்திட்டத்தில், 520 பேருக்கு மாதம், 5.20 லட்சம் ரூபாய் வழங்கப்படுகிறது. இத்தகவலை மாற்றுத்திறனாளிகள் நலத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.