கால்நடை துறை இடத்தில் அத்துமீறி வணிக வளாகம் கட்டும் நகராட்சி
புன்செய் புளியம்பட்டி: புன்செய் புளியம்பட்டி நகராட்சி அலுவலகத்தை ஒட்டியுள்ள, கால்நடை பராமரிப்பு துறைக்கு சொந்தமான, மந்தைவெளி இடத்தை ஆக்கிரமித்து, நகராட்சி நிர்வாகம் சார்பில் வணிக வளாக கடை கட்டப்படுவதாக புகார் எழுந்தது. இதுகுறித்து தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் சார்பில், விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில், கலெக்டரிடமும், நகர காங்., கட்சி சார்பில், நகராட்சி அலுவலகத்தில் மனு கொடுக்கப்பட்டது. ஆனாலும், கட்டுமான பணி நடப்பதாக, மனு அளித்தவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். இதுகுறித்து தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்க மாவட்ட அமைப்பு செயலாளர் ஜோதி அருணாச்சலம் கூறியதாவது: கால்நடை பராமரிப்பு துறை இடத்தை ஆக்கிரமித்து, நகராட்சி கடை கட்டப்படுகிறது. மற்ற அரசுத்துறை இடத்தில் கட்டடம் கட்டும்போது, அதற்கு சமமான இடத்தை வழங்க வேண்டும். இதுகூட தெரியாமல் நகராட்சியில் வேலை நடக்கிறது. கலெக்டர், நகராட்சி நிர்வாக மண்டல இயக்குனர் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் ஆய்வு செய்து, கட்டுமான பணிக்கு அங்கீகாரம் வழங்கிய நகராட்சி பொறியாளர், நகராட்சி அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு கூறினார்.இதுகுறித்து கால்நடை பராமரிப்புத்துறை இணை இயக்குனர் பழனிவேல் கூறியதாவது: புளியம்பட்டி நகராட்சி நிர்வாகம் இதுவரை கட்டுமான பணிகளை மேற்கொள்ளும் இடத்திற்கு ஈடாக, எந்த இடத்தையும் ஒப்படைக்கவில்லை; அரசாணையையும் சமர்ப்பிக்கவில்லை. ஆனால், நகராட்சி சார்பில் கட்டுமான பணி நடப்பதாக தகவல் கிடைத்துள்ளது. இதுகுறித்து மாவட்ட வருவாய் அலுவலரிடம் தகவல் தெரிவித்துள்ளோம். இவ்வாறு கூறினார்.