ஈரோடு: ஈரோட்டில் ஆஞ்சநேயர் ஜெயந்தி விழாவுக்காக, 60 ஆயிரம் லட்டுகள் தயாரிக்கும் பணி, தீவிரமாக நடந்து வருகிறது. ஈரோடு, வ.உ.சி., பூங்கா வளாகத்தில், இந்து சமய அறநிலையத் துறை கட்டுப்பாட்டில், மகாவீர ஆஞ்சநேயர் கோவில் உள்ளது. இங்கு நாளை மறுதினம், அனுமன் ஜெயந்தி விழா கொண்டாடப்படவுள்ளது. இதில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்பர்.பக்தர்களுக்கு வழங்குவதற்காக, ஆஞ்சநேயர் வார வழிபாட்டு குழு சார்பில், ௬௦ ஆயிரம் லட்டு தயாரிக்கும் பணி தொடங்கியுள்ளது. இதுகுறித்து வார வழிபாட்டு குழுத்தலைவர் குமார் கூறியதாவது: ஆஞ்சநேயர் ஜெயந்தி விழாவை முன்னிட்டு, எங்கள் வார வழிபாட்டுக்குழு, 36 ஆண்டுகளுக்கும் மேலாக, பக்தர்களுக்கு பிரசாதம், அன்னதானம் வழங்கும் பணியில் ஈடுபட்டுள்ளது. இந்த ஆண்டு பக்தர்களுக்கு வழங்கும் வகையில், 60 ஆயிரம் லட்டு தயாரிக்கப்பட்டு வருகிறது. இதில், 40க்கும் மேற்பட்டோர் ஈடுபட்டுள்ளனர்.லட்டு தயாரிக்க, 2,000 கிலோ சர்க்கரை, 1,000 கிலோ கடலை மாவு, 40 கிலோ முந்திரி, 100 கிலோ திராட்சை, 50 டின் ஆயில் பயன்படுத்தப்படவுள்ளது. இதில்லாமல் நுாற்றுக்கும் மேற்பட்ட தன்னார்வலர்களால் செந்துாரம், மஞ்சள் கயிறு, துளசி போன்றவற்றை பேக்கிங் செய்யும் பணியும் நடக்கிறது.இவ்வாறு அவர் கூறினார்.