தொழிலாளர் தொகுப்பு சட்டங்கள் வாபஸ் கோரி மறியல்; 224 பேர் கைது
ஈரோடு: மத்திய அரசு, 29 தொழிலாளர் சட்டங்களை, 4 தொகுப்பு சட்டங்களாக மாற்றி மசோதா கொண்டு வந்து நிறைவேற்றி உள்ளனர். சட்டம் நிறைவேற்றப்பட்டு, 5 ஆண்டுக்கு பின் அதனை அமலாக்குகின்றனர். இத்தொகுப்பில் தொழிற்சங்கங்கள் போராடி பெற்ற தொழிலாளர்களின் நலன் காக்கும் அம்சங்கள், தொழிலாளர் பாதுகாப்பு முறைகள் முற்றிலும் அழிக்கப்பட்டு, தொழில் நிறுவனங்கள், கார்பரேட் நிறுவனங்களுக்கு சாதகமான சட்டங்களாகவே உள்ளன. மத்திய அரசு இச்சட்ட தொகுப்பை திரும்ப பெற வேண்டும்.மாநில அரசு, எக்காரணம் கொண்டு இச்சட்ட தொகுப்பை நிறைவேற்றக் கூடாது என வலியுறுத்தி, சி.ஐ.டி.யு., மாநில துணை பொதுச் செயலாளர் திருச்செல்வன் தலைமையில், ஈரோடு அரசு மருத்துவமனை ரவுண்டானா அருகே, டாஸ்மாக், மக்களைத்தேடி மருத்துவம், மின் ஊழியர்கள் உட்பட பல்வேறு ஊழியர் சங்கம் - சி.ஐ.டி.யு., சார்பில் நேற்று மறியலில் ஈடுபட்டனர். மாவட்ட தலைவர் சுப்பிரமணியம், நிர்வாகிகள் ஸ்ரீராம், பொன்பாரதி, ஜோதிமணி, சுந்தரராமன் உட்பட, 224 பேர் கைது செய்யப்பட்டனர்.