சொத்து வரி குறைக்கக்கோரி கருணாநிதி சிலையிடம் மனு கொடுக்கும் போராட்டம்
ஈரோடு, ஈரோடு மாநகராட்சியில் உயர்த்தப்பட்டுள்ள சொத்து வரியை குறைக்கக் கோரி, ஈரோடு வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம் சார்பில், ஆணையரிடம் மனு அளித்த பிறகு, ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து, ஊர்வலமாக சென்று பன்னீர்செல்வம் பார்க்கில் உள்ள கருணாநிதி சிலையிடம், மனு அளிக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.அப்போது கோவை, திருச்சி, கரூர் மாநகராட்சிகளை விட, ஈரோடு மாநகராட்சியில் பல மடங்கு சொத்து வரி உயர்த்தப்பட்டுள்ளது. இதனால் தொழில் நிறுவனங்கள் நசிந்து வருகின்றன. மாநகராட்சி கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட, சிறப்பு தீர்மானத்தின்படி, சொத்து வரிக்கான அடிப்படை கட்டணத்தை பாதியாக குறைக்க வேண்டும். ஆண்டுதோறும், 6 சதவீதம் வரி உயர்வு என்பதை மாற்றி, 5 ஆண்டுக்கு ஒருமுறை மட்டும் வரி உயர்வு, வரி சீராய்வு செய்ய வேண்டும் என்பன போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷமிட்டனர்.பின்பு, அமைச்சர்கள் முதல் அதிகாரிகள் வரை மனு கொடுத்தும், முதல்வர் நடவடிக்கை எடுக்கவில்லை என்பதால், அவரது தந்தையிடம் மனு அளிப்பதாக கூறி, பன்னீர்செல்வம் பார்க்கில் உள்ள கருணாநிதி சிலையிடம் மனு அளிக்கும் நுாதன போராட்டத்தில் ஈடுபட்டனர். சங்க தலைவர் சண்முகசுந்தரம், செயலாளர் பாரதி உட்பட பலர் கலந்து கொண்டனர்.