ஈரோடு: தமிழ்நாடு மோட்டார் வாகன ஆலோசகர் நலச்சங்கத்தினர், ஈரோடு கலெக்டர் ராஜகோபால் சுன்கராவிடம், நேற்று மனு வழங்கி கூறியதாவது:பழைய டூவீலர், நான்கு சக்கர வாகனங்களை வாங்கி விற்கிறோம். இத்தொழிலில் இரண்டு லட்சத்துக்கும் அதிகமானோர் உள்ளனர். தற்போது போக்குவரத்து துறையில் வந்துள்ள புது நடைமுறைப்படி, வாகனங்களின் ஆவணங்களை சரிபார்த்துவிட்டு, வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் எங்களிடம் தராமல், தபாலில் அனுப்புகின்றனர்.வாகன உரிமையாளர், நிதி நிறுவனத்தில் கடன் பெற்று தொகையை கட்டாமல், நிதி நிறுவனத்தில் வாகனத்தை ஒப்படைக்கும்போது, அந்நிறுவனம் எங்களை போன்றோர் மூலம் பெயர் மாற்றம் அல்லது ஆவண மாற்றம் செய்ய ஆர்.டி.ஓ., அலுவலகத்தில் கட்டணம் செலுத்த விண்ணப்பிக்கிறோம். ஆவணத்தை பழைய ஓனர் விலாசத்துக்கு அனுப்புவதாலும், அந்நபரின் ஆதார், மொபைல் எண் உள்ளிட்ட ஆவணங்களை கேட்பதாலும், மாற்றங்கள் செய்ய முடியவில்லை. வாகனம் வாங்கும்போது வழங்கும் அதே முகவரி, மொபைல் எண்ணை யாரும் தொடர்ந்து வைத்திருப்பதில்லை. வாகன சான்று, எப்.சி., முடிவடைந்த வாகனங்கள், பெயர் மாற்றம் செய்யும்போது, பெயர் மாற்றம் செய்யக்கூடிய ஊரிலேயே, எப்.சி., காண்பிக்கும் பழைய நடைமுறையை ஏற்படுத்த வேண்டும்.வாகனத்தின் பழைய ஓனருக்கு, பெயர் மாற்றம் உள்ளிட்டவைகளுக்கு ஓ.டி.பி., செல்வதால் சிரமம் ஏற்படுகிறது. வாகன ஓட்டிக்கு தெரியாமல் விதிக்கப்படும் அபராதம், பல மடங்காகி சிரமத்தை ஏற்படுத்துகிறது. இவ்வாறு கூறினர்.