பு.புளியம்பட்டி: போகி பண்டிகை நேற்று கொண்டாடப்பட்ட நிலையில், இன்று பொங்கல், நாளை மாட்டு பொங்கல், காணும் பொங்கல் என பொங்கல் கொண்டாட்டத்திற்கு, கிராமப்புற மக்கள் ஆயத்தமாகி வருகின்றனர். இதனால் புன்செய்புளியம்பட்டி பகுதியில் பொங்கல் பொருட்கள் வியாபாரம் களை கட்ட துவங்கியது. இதற்காக பல்வேறு இடங்களில் தற்காலிக கடை அமைக்கப்பட்டு, வாழைக்கன்று, கரும்பு, மாவிலை, பூமாலை, பூளைப்பூ, அரசாணிக்காய், அவரை உள்ளிட்ட பூஜைக்கு தேவையான பொருட்கள் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்தன.இதில்லாமல் மஞ்சள், சிவப்பு, பச்சை, நீலம் என பல வகை நிறங்களில் கோல மாவு மற்றும் கோலகட்டி விற்பனையும் களை கட்டியது.கரும்பு விற்பனை ஜோர்...சேலம் மாவட்டம் சங்ககிரி, வைகுந்தம் பகுதிகளில் இருந்து கரும்பு கொள்முதல் செய்யப்பட்டு, சந்தையில் விற்பனைக்காக குவிக்கப்பட்டது. ஒரு ஜோடி கரும்பு, 80 ரூபாய் முதல் 100 ரூபாய் வரை விற்றது.மாடுகளுக்கு புது கயிறுமாட்டு பொங்கலன்று, மாடுகளை குளிப்பாட்டி, கொம்புகளுக்கு வண்ணம் தீட்டி, கழுத்தில் மணிகட்டி, மாலை அணிவித்து அலங்காரம் செய்து வழிபடுவர். அப்போது கழுத்து கயிறு, மூக்கணாங்கயிறுகளை புதியதாக கட்டுவர். இதற்காக அமைக்கப்பட்ட கடைகளில் ஒரு கயிறு, 20 முதல், 150 ரூபாய் வரை விற்பனையானது.சங்கராந்தி பொங்கலுக்கு பயன்படுத்தும் மொச்சை அவரை, அரசாணி காய்க்கு கடும் கிராக்கி ஏற்பட்டது. ஒரு கிலோ எடையுள்ள அரசாணிக்காய், 30 முதல் 60 ரூபாய்க்கு விற்றது. பொங்கலுக்கு தேவைப்படும் பல்வேறு வகையான பொருட்களை, மக்கள் ஆர்வத்துடன் வாங்கி சென்றதால், புன்செய்புளியம்பட்டி பகுதியில், நேற்று வர்த்தகம் களை கட்டியது.* ஈரோடு ஆர்.கே.வி.ரோடு, மணிக்கூண்டு, நேதாஜி தினசரி காய்கறி மார்க்கெட், பவானிரோடு, கருங்கல்பாளையம், பெரியவலசு, முனிசிபல்காலனி, மீனாட்சி சுந்தரனார் சாலை, மரப்பாலம், காளைமாட்டு சிலை, கொல்லம்பாளையம், நாடார்மேடு, சாஸ்திரிநகர், மூலப்பாளையம் உள்பட பல்வேறு இடங்களில், பொங்கலுக்கு தேவையான பொருட்களை, மக்கள் ஆர்வமாக வாங்கி சென்றனர். குறிப்பாக கரும்புகள், வண்ணம் தீட்டப்பட்ட மண் பானை விற்பனை அமோகமாக நடந்தது.