| ADDED : மே 03, 2024 06:44 AM
ஈரோடு : ஈரோடு மாவட்டத்தில் எட்டு அரசு மருத்துவமனைகளில், வெப்ப அதிர்ச்சி நோய்க்கான சிறப்பு வார்டுகள் துவங்கப்பட்டுள்ளன.இதுகுறித்து ஈரோடு அரசு மருத்துவமனை உறைவிட மருத்துவர் சசிரேகா கூறியதாவது: வெப்ப தாக்கத்தால் நான்கு வகையான பிரச்னை வரும். எரிச்சலால் ஏற்படும் புண், தோல் சிவப்பாக நிறம் மாறுதல், கால்களில் நரம்பு இழுத்து கொள்வது, வயிற்று வலி போன்றவையாகும். தவிர உடலில் நீர்ச்சத்து குறைபாட்டாலும் பிரச்னை வரும். எனவே உடலில் நீர்ச்சத்து குறையாமல் பார்த்து கொள்ள வேண்டும். வெப்பத்தால் உடல் சோர்வடைந்தால், உடல் தளர்ச்சி, வாந்தி, நாடித்துடிப்பு வேகம் குறைதல் ஏற்படும். இறுதியாக வெப்ப அதிர்ச்சி அல்லது வெப்ப பக்கவாத நோய் ஏற்படும். இது, அதிக வெப்பத்தால் ஏற்படும். இவ்வாறு பாதித்தோர் உடல் வெப்பம் கட்டுக்கடங்காத வெப்ப நிலைக்கு மாறிவிடும். வெப்ப அதிர்ச்சி பாதிப்பு ஏற்பட்டால், மருத்துவமனைக்கு வர தாமதம் ஆகும் பட்சத்தில் குளிர்ந்த நீரை உடலில் ஊற்ற வேண்டும். பின், ஆம்புலன்ஸ் மூலம் அரசு மருத்துவமனை, ஆரம்ப சுகாதார நிலையம் செல்ல வேண்டும். அங்கு வெப்ப அதிர்ச்சி அல்லது வெப்ப பக்கவாத நோய்க்கு சிகிச்சையாக, உடலை குளிரூட்டுவார்கள். இதற்காக ஈரோடு அரசு மருத்துவமனையில் சிறப்பு வார்டு அமைக்கப்பட்டுள்ளது. மாவட்ட அளவில் எட்டு அரசு மருத்துவமனைகளிலும் செயல்படுகிறது. இதுவரை எவரும் வெப்ப அதிர்ச்சி தாக்குதல் சிகிச்சைக்காக வரவில்லை. இவ்வாறு கூறினார்.