| ADDED : நவ 24, 2025 04:32 AM
ஈரோடு:ஈரோடு பழையபாளையம் கணபதி நகர் நான்காவது வீதியில் ஓய்வு பெற்ற பேராசிரியை சுப்புலட்சுமி, 69, தனியாக வசிக்கிறார். மகள் வெளிநாட்டில் வசிக்கிறார். சுப்புலட்சுமி கணவர் ஆடிட்டர் துரைசாமி இறந்து விட்டார். கடந்த, 20ம் தேதி இரவு வீட்டுக்குள் புகுந்த ஆசாமிகள், 40 பவுன் நகை, ஏழு லட்சம் ரூபாயை திருடி சென்றனர். இதே வீட்டில், 2023ல் ஆந்திராவை சேர்ந்த அனில்குமார், 150 பவுன் தங்க நகையை திருடி சென்றார். அந்த வழக்கு நிலுவையில் உள்ளது. மீண்டும் திருட்டு நடந்துள்ளதால், டவுன் டி.எஸ்.பி., முத்துக்குமரன், இன்ஸ்பெக்டர் செந்தில் பிரபு தலைமையில் தலா ஒரு தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.இதுகுறித்து போலீசார் கூறியதாவது:உள்ளூர் நபர்கள் திருட்டில் ஈடுபட்டிருக்க வாய்ப்பில்லை. இதுவரை, 20 'சிசிடிவி' கேமராக்களின் பதிவை போலீசார் பார்த்துள்ளனர். சுப்புலட்சுமி வீட்டு 'சிசிடிவி' கேமராவில் ஆள் வந்து செல்வது மட்டும் தெரிகிறது. ஏற்கனவே இவர்கள் வீட்டில் திருடிய அனில்குமார் வேறொரு வழக்கில், கன்னியாகுமரி சிறையில் இருந்தார். கடந்த செப்டம்பரில் வெளியே வந்துள்ளார். இதனால் அவரது நடவடிக்கையையும் கண்காணிக்கிறோம். இவ்வாறு கூறினர்.