| ADDED : ஜூலை 12, 2024 05:14 AM
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய வழக்கில் மேலும் இருவரை சி.பி.சி.ஐ.டி., போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து 66 பேர் இறந்த வழக்கை விசாரித்து வரும் சி.பி.சி.ஐ.டி., போலீசார் 22 பேரை கைது செய்து சிறையில் அடைத்தனர். அவர்களில் 11 பேரை காவலில் எடுத்து விசாரித்தனர். அதில், சாராயம் விற்ற வழக்கில் தற்போது கடலுார் மத்திய சிறையில் உள்ள கருணாபுரம் ராமசாமி மகன் பரமசிவம்,40; பரமசிவம் மகன் முருகேசன்,48; ஆகியோர் கண்ணுகுட்டி(எ) கோவிந்தராஜியிடம் மெத்தனால் கலந்த சாராயத்தை வாங்கி விற்பனை செய்தது தெரிய வந்தது.அதன்பேரில் கடலுார் சிறையில் உள்ள பரமசிவம், முருகேசன் ஆகியோரை, கள்ளச்சாராய வழக்கில் கைது செய்ய அனுமதி கேட்டு கள்ளக்குறிச்சி தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் சி.பி.சி.ஐ.டி., போலீசார் மனுதாக்கல் செய்தனர். மனுவை ஏற்ற நீதிபதி ஸ்ரீராம், அனுமதி வழங்கினார். இதனால், கள்ளச்சாராய வழக்கில் கைதானவர்களின் எண்ணிக்கை 24 ஆக உயர்ந்தது.பின்னர் கடலுார் சிறையில் இருந்த பரமசிவம், முருகேசன் ஆகியோரை நேற்று காலை கள்ளக்குறிச்சி கோர்ட்டில் ஆஜர்படுத்தி, ஒரு நாள் காவலில் வைத்து விசாரிக்க அனுமதி கோரி சி.பி.சி.ஐ.டி., போலீசார் மனு தாக்கல் செய்தனர். மனுவை ஏற்ற நீதிபதி ஸ்ரீராம் அனுமதி வழங்கியதை தொடர்ந்து, இருவரையும் நேற்று மதியம் 1:00 மணிக்கு டி.எஸ்.பி., அலுவலகத்திற்கு அழைத்து சென்று சி.பி.சி.ஐ.டி., போலீசார் 4 மணி நேரம் விசாரணை நடத்தினர்.பின்னர் மாலை 5:00 மணிக்கு இருவரையம் கோர்ட்டில் ஆஜர்படுத்தி, கடலுார் மத்திய சிறையில் அடைத்தனர்.