| ADDED : ஆக 05, 2024 12:28 AM
தியாகதுருகம்: மாவட்டத்தில் உள்ள தடுப்பணைகள் அனைத்தும் வறண்டு கிடப்பதால் நிலத்தடி நீர்மட்டம் குறைந்து இந்த ஆண்டு விவசாயிகள் பயிர் சாகுபடி செய்வது கேள்விக்குறியாகி உள்ளது.கள்ளக்குறிச்சி மாவட்டத்தின் மேற்கு எல்லையாக உள்ள கல்வராயன் மலையில் உற்பத்தியாகும் கோமுகி மற்றும் மணிமுக்தா ஆகிய 2 ஆறுகள் முக்கிய நீர் ஆதாரமாக உள்ளது.கோமுகி ஆற்றின் குறுக்கே சோமண்டார்குடி, கள்ளக்குறிச்சி, நிறைமதி, விருகாவூர் ஆகிய இடங்களிலும் மணிமுத்தா ஆற்றின் குறுக்கே சூ.பாலப்பட்டு, வடபூண்டி, கண்டாச்சிமங்கலம் ஆகிய இடங்களிலும் தடுப்பணைகள் உள்ளன.பருவ மழைக் காலங்களில் ஆற்றில் செல்லும் தண்ணீர் தடுப்பணைகளில் சேமிக்கப்படுகிறது. இங்கிருந்து கால்வாய்கள் மூலம் சுற்றியுள்ள ஏரிகளுக்கு தண்ணீர் எடுத்து செல்லப்பட்டு நிரம்புகிறது.ஆற்றில் நீரோட்டம் குறைந்தாலும் தடுப்பணையில் சேமிக்கப்படும் தண்ணீர் பல மாதங்களுக்கு அப்பகுதியில் நிலத்தடி நீர் மட்டம் குறையாமல் பாதுகாக்கிறது. இதன் காரணமாக கிணற்று பாசனம் கை கொடுத்து ஆற்றுப்படுகையில் உள்ள விளை நிலங்களில் 3 போகமும் பயிர் சாகுபடி செய்ய முடிகிறது.இந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை துவங்கி 2 மாதங்கள் ஆகியும் இதுவரை மாவட்டத்தில் எதிர்பார்த்த அளவு மழை பெய்யவில்லை.கடந்த ஆண்டு ஜூன் மாதத்திலேயே தடுப்பணைகள் அனைத்தும் நிரம்பி வழிந்தன. அதனைத்தொடர்ந்து, வடகிழக்கு பருவமழை எதிர்பார்த்த அளவு பெய்யாமல் ஏமாற்றிய போதும் ஓரளவு நிலத்தடி நீர்மட்டம் தக்க வைக்கப்பட்டது.இந்த ஆண்டு இதுவரை போதிய மழை பெய்யவில்லை. மேலும், வழக்கமாக மே மாதத்தில் பெய்யும் கோடை மழையும் குறைந்ததால் மாவட்டத்தில் தற்போது அனைத்து நீர் நிலைகளும் வறண்டு கிடக்கிறது.இதன் காரணமாக நிலத்தடி நீர்மட்டம் குறைந்து கிணற்று நீர் பாசனம் கேள்விக்குறியாக உள்ளது. வழக்கமாக ஆடிப்பட்டத்தில் சம்பா பருவ சாகுபடிக்கான நெல் நாற்று விடும் பணி துவங்கும். நீர்வளம் போதிய அளவு இருந்தால் மட்டுமே நெல் சாகுபடி செய்ய முடியும்.இதுவரை மழை பெய்யாமல் நீர்நிலைகள் வறண்டிருப்பதால் நெல் நாற்று விடும் பணிகளை துவக்க முடியாமல் விவசாயிகள் கவலையில் உள்ளனர்.இம்மாத இறுதிக்குள் ஓரளவு மழை பெய்து நீர் நிலைகளுக்கு தண்ணீர் வரத்து கிடைத்தால் மட்டுமே நெல் சாகுபடி மேற்கொள்ள முடியும் என விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.இதே நிலை தொடர்ந்தால் மாவட்டத்தில் நெல் சாகுபடி பரப்பு குறைந்து தானிய உற்பத்தி சரியும் நிலை ஏற்படும். இதனால் பருவமழை இனியாவது கை கொடுக்க வேண்டும் என விவசாயிகள் கவலையோடு காத்திருக்கின்றனர்.