| ADDED : ஜூன் 18, 2024 11:59 PM
கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சி கலெக்டர் அலுவலகத்தில் வளமிகு வளர்ச்சி திட்டத்தின் கீழ் கல்வராயன்மலை மற்றும் தியாகதுருகம் வட்டாரங்களின் வளர்ச்சி குறித்த ஆய்வு கூட்டம் நடந்தது.கலெக்டர் ஷ்ரவன்குமார் தலைமை தாங்கினார். கூட்டத்தில் இரு வட்டாரங்களிலும் பெண் குழந்தைகளின் பிறப்பு விகிதத்தை அதிகரித்தல், அங்கன்வாடி மையங்களை புனரமைக்க வேண்டும்.அரசு பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கையை அதிகரித்தல், இடை நிற்றல் மாணவர்களை கண்டறிந்து பள்ளிகளில் சேர்த்தல், குழந்தை திருமணத்தை தடுக்க வேண்டும். குழந்தைகளின் ஆரோக்கியத்தை உறுதிப்படுத்த வேண்டும். பெண்கள் மற்றும் மகளிர் சுய உதவி குழுக்களுக்கு கடன் வழங்குதலை அதிகரிக்க வேண்டும். சுய வேலை வாய்ப்புகளை உருவாக்குதல் வேண்டும்.கல்வராயன்மலைகளில் தோட்டக்கலை பயிர்களை அதிகளவில் பயிரிடுதல், தேன் வளர்ப்பு ஊக்கப்படுத்தி சந்தை படுத்துதல் வேண்டும். அனைத்து கிராமங்களிலும் அடிப்படை வசதிகளை மேற்கொள்ள வேண்டும்.பள்ளிகளில் ஊட்டச்சத்து காய்கறி தோட்டம் அமைப்பது உள்ளிட்ட வளர்ச்சிக்கான அனைத்து நடவடிக்கையும் மேற்கொள்ள வேண்டும்.அனைத்து துறை அதிகாரிகளும் இணைந்து பணியாற்றி அனைத்து நிலைகளிலும் வளர்ச்சியை மேம்படுத்த வேண்டும். இரு வட்டாரங்களிலும் அனைத்து துறை அலுவலர்களும் தனி கவனம் மேற்கொண்டு வளர்ச்சி மற்றும் கல்வி, சுகாதாரம், வேலை வாய்ப்புகளில் முதன்மை நிலையை அடைந்து வளமிகு வட்டாரங்களாக மேம்பட பணியாற்றிட வேண்டும் என்று எடுத்துரைக்கப்பட்டது. கூட்டத்தில் திட்ட இயக்குனர்கள் (ஊரக வளர்ச்சி முகமை) தனபதி, (மகளிர் திட்டம்) சுந்தர்ராஜன், ஊராட்சிகளின் உதவி இயக்குனர் (பொ) இளங்கோவன், சி.இ.ஓ., முருகன், சுகாதார பணிகள் துணை இயக்குனர் ராஜா, மாவட்ட சமூக நல அலுவலர் தீபிகா, ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட பணி அலுவலர் செல்வி, மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் தியாகராஜன், தாட்கோ மேலாளர் தாட்சாயிணி, சென்னை லயோலா கல்லுாரி உதவி பேராசிரியர்கள், பி.டி.ஓ.,க்கள் மற்றும் அரசு அலுவலர்கள் பலர் பங்கேற்றனர்.