| ADDED : மே 19, 2024 06:20 AM
கள்ளக்குறிச்சி, கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் சாலை விபத்துக்களை கட்டுப்படுத்த உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று எஸ்.பி., அறிவுறுத்தியுள்ளார். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் சாலை விபத்துக்களை குறைப்பது தொடர்பாக எஸ்.பி., அலுவலகத்தில் ஆலோசனை கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு எஸ்.பி.,சமய்சிங் மீனா தலைமை தாங்கினார். கூட்டத்தில் மாவட்டத்தில் சாலை விபத்துக்களை கட்டுப்படுத்த காவல்துறை சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக கள்ளக்குறிச்சி மாவட்டத்தின் வழியாக செல்லும் தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலைகளில் தொடர்ந்து விபத்துக்கள் நடைபெறும் இடங்களை கண்டறிந்து எச்சரிக்கை பலகைகள் வைக்க வேண்டும். அதேபோல் சாலைப் பணிகளின் போது முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். இரவு நேரங்களில் சாலை சந்திப்பு மற்றும் வளைவுகளில் ஒளிரும் மின் விளக்குகள் மற்றும் பேரிகாட் வைக்க வேண்டும். நெடுஞ்சாலைகளில் இருசக்கர வாகனங்கள் செல்வதற்கான பாதையை அமைக்க வேண்டும். கிராமப் புறங்களில் சாலைகளின் தரத்தினை ஆராய வேண்டும். மாவட்டத்தில் சாலை விபத்துகளை கட்டுபடுத்தும் பொருட்டு உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டது. கூட்டத்தில் தேசிய நெடுஞ்சாலைத்துறை, மாநில நெடுஞ்சாலைத்துறை, நகராட்சி துறை, காவல்துறை அதிகாரிகள், போக்குவரத்து போலீசார் மற்றும் தனிப்பிரிவு இன்ஸ்பெக்டர் சண்முகம் உட்பட பலர் பங்கேற்றனர்.