| ADDED : ஆக 08, 2024 11:32 PM
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சியில் அனிமல் மொபைல் மெடிக்கல் ஆம்புலன்ஸ் டிரைவர் பணிக்கு நாளை நேர்காணல் நடைபெற உள்ளது.கள்ளக்குறிச்சி 108 ஆம்புலன்ஸ் மேலாளர் குமரன் விடுத்துள்ள செய்திக்குறிப்பு: நோயால் பாதிக்கப்பட்ட கால்நடைகளுக்கு உடனடியாக சிகிச்சை அளிப்பதற்காக, நடமாடும் கால்நடை சேவை திட்டம் உள்ளது. இத்திட்டத்தின் கீழ் கால்நடை உரிமையாளர்கள் 1962 என்ற எண்ணை தொடர்பு கொண்டு, நோயின் தன்மை குறித்து தெரிவிக்க வேண்டும். உடன், 'அனிமல் மொபைல் மெடிக்கல் ஆம்புலன்ஸ்' மூலம், கால்நடைகளின் இருப்பிடத்திற்கு நேரடியாக சென்று சிகிச்சை அளிக்கப்படும். இத்திட்டத்தில், ஆம்புலன்ஸ் டிரைவர் பணிக்கு நாளை (10ம் தேதி) கள்ளக்குறிச்சி காந்திரோட்டில் உள்ள அரசு மருத்துவமனையில், 108 ஆம்புலன்ஸ் அலுவலகத்தில் நேர்க்காணல் நடக்கிறது. நேர்க்காணலில் பங்கேற்கும் நபர்கள், 24 - 35 வயதுக்குட்பட்டவராகவும், 8ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவராகவும் இருக்க வேண்டும். ஓட்டுநர் உரிமம் எடுத்து 3 ஆண்டுகள், 'பேட்ஜ்' உரிமம் பெற்று ஒரு ஆண்டு நிறைவு பெற்றிருப்பதுடன், 162.5 செ.மீ., உயரம் இருக்க வேண்டும். அசல் கல்விச்சான்று, ஓட்டுநர் உரிமம் கட்டாயம் எடுத்து வர வேண்டும். மாத ஊதியமாக ரூ.12 ஆயிரம் வழங்கப்படும். தேர்வு செய்யப்படும் நபர்கள் தமிழ்நாடு முழுவதும் பணியமர்த்தப்படுவர்.மேலும் விபரங்களை 91542 50856 என்ற எண்ணை தொடர்பு கொண்டு கேட்டறியலாம்.