| ADDED : ஜூன் 20, 2024 08:11 PM
கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சி கருணாபுரத்தில் சாக்கடை கால்வாய் துார் வார வந்த துாய்மை பணியாளர்களை பெண்கள் முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு நிலவியது.கள்ளக்குறிச்சி நகராட்சி, கருணாபுரம் பகுதியில் விஷ சாராயம் குடித்து பலர் இறந்தனர். இச்சம்பவம் தமிழகத்தையே உலுக்கிய நிலையில் பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் இறந்தவர்களின் குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூறினர்.இச்சம்பவத்திற்கிடையே தலைவர்களின் வருகையையொட்டி, விஷ சாராயம் குடித்து இறந்தவர்களின் உடல்கள் இருக்கும் பகுதியான கருணாபுரம் பகுதியில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். அதே நேரத்தில் கருணாபுரம் மாரியம்மன் கோவில் பகுதியில் நகராட்சி துாய்மை பணியாளர்கள் நேற்று காலை 10:30 மணியளவில் சாக்கடை கால்வாயில் உள்ள அடைப்புகளை துார்வாரும் பணியில் ஈடுபட முயன்றனர். இதனை பார்த்த அப்பகுதி பெண்கள், நகராட்சி துாய்மை பணியாளர்களை முற்றுகையிட்டு இத்தனை நாட்களாக வரவில்லை. இப்போது தான் சாக்கடை கால்வாய் துார்வார வரமுடிந்ததா என, கேட்டு வாக்குவாதத்தில், ஈடுபட்டு பணிகளை தடுத்து நிறுத்தினர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.