| ADDED : நவ 19, 2025 06:43 AM
திருக்கோவிலுார்: முடியனுார் அருணாச்சலேஸ்வரர் கோவிலில், ஐம்பொன்னால் ஆன அம்மன் சிலை கண்டெடுக்கப்பட்டது. கள்ளக்குறிச்சி மாவட்டம், திருக்கோவிலுார் அடுத்த முடியனுாரில், 12ம் நுாற்றாண்டு பழமையான அருணாச்சலேஸ்வரர் கோவில் உள்ளது. பாழடைந்து, கோவில் கட்டுமானங்கள் இடிந்து கிடந்ததால், பூஜைகள் நடைபெறாமல் இருந்தது. பழமையான இக்கோவிலை புனரமைத்து திருப்பணி செய்ய, கிராம மக்கள், பக்தர்களின் கோரிக்கையை ஏற்று, சமீபத்தில், 2.63 கோடி ரூபாய் மதிப்பில் ஹிந்து சமய அறநிலையத்துறை பணியை துவக்கியது. நேற்று முன்தினம் மாலை, ஜே.சி.பி., மூலம் கோவில் கட்டுமான கருங்கற்களை அகற்றும் பணி நடந்தது. அப்போது, கற்களுக்கு மத்தியில் இரண்டரை அடி உயரமுள்ள கைகளில் திரிசூலம், உடுக்கை, கபாலம், ஆயுதம் ஏந்தியபடி விரிசடையுடன் கூடிய பழமையான ஐம்பொன் அம்மன் சிலை கண்டெடுக்கப்பட்டது. கூடவே பூஜை செய்யும் மணியும் இருந்தது. அப்பகுதியில் இருந்தவர்கள் சிலையை மீட்டனர்.