| ADDED : பிப் 01, 2024 06:31 AM
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி பகுதியில் நடந்த ஈர நில பறவைகள் கணக்கெடுப்பு பணியில் 40 வகையான பறவை இனங்கள் கண்டறியப்பட்டன.கள்ளக்குறிச்சி கோமுகி மற்றும் மணிமுக்தா அணைகள், நீலமங்கலம், ஏமப்பேர், ஆலத்துாரி ஏரிகள் உட்பட 28 நீர் நிலைகளில் வனத்துறை சார்பில் ஈரநில பறவைகள் கணக்கெடுப்பு பணி நடந்தது. இதற்காக 7 குழுக்கள் உருவாக்கப்பட்டது.ஒவ்வொரு குழுவிலும் வனத்துறை அலுவலர்கள், தன்னார்வலர்கள் மற்றும் கல்லுாரி மாணவர்கள் என 6 முதல் 8 பேர் வரை இருந்தனர்.இதில், நீலமங்கலம் ஏரியில் நடந்த பறவைகள் கணக்கெடுப்பு பணியில், விழுப்புரம் மாவட்ட வன அலுவலர் சுமேஷ்சோமன், வனச்சரக அலுவலர் பசுபதி உள்ளிட்டோர் பங்கேற்றனர். 28 இடங்களில் நடந்த கணக்கெடுப்பு பணியில் நத்தக்கொத்தி நாரை, சாம்பல் நாரை, பாம்புதாரா, முக்களிப்பான், நீர்காகம் உட்பட 40 வகையான பறவை இனங்கள் கண்டறியப்பட்டது.இதில், வெண்கழுத்து நாரை, ஆற்றுஆலா உள்ளிட்ட 2 வகை அரிய பறவைகள் கண்டறியப்பட்டன. தொடர்ந்து, அனைத்து பறவைகளின் புகைப்படம் மற்றும் கணக்கெடுப்பு விபரங்கள் ஆன்லைனில் பதிவேற்றம் செய்யப்பட்டது.