திருக்கோவிலுார்: திருக்கோவிலுாரில் துவக்கப்பட்ட மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை, தெப்பக்குளம் மற்றும் புதிய பஸ் நிலைய கட்டுமான பணிகள் நிறுத்தப்பட்டு கிடப்பதால், மக்கள் அதிருப்தி அடைந்துள்ளனர். திருக்கோவிலுார் அரசு மருத்துவமனையை மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையாக அரசு தரம் உயர்த்தி அறிவித்தது. அதற்கேற்ப ரூ. 54 கோடி மதிப்பில், ஆறு தளங்களுடன், இரண்டு பிளாக்குகளாக மருத்துவமனை அமைக்க கடந்த 2022ம் ஆண்டு நவ., மாதம் டெண்டர் விடப்பட்டது. கட்டுமான பணிகளை 18 மாதத்தில் முடிக்க ஒப்பந்தம் வழங்கப்பட்டது. ஆனால், ஒப்பந்ததாரர் கால தாமதமாக பணியை துவக்கினார். ஒப்பந்தபடி, அதன்படி கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் கட்டுமான பணிகள் நிறைவடைந்திருக்க வேண்டும். ஒப்பந்த காலம் முடிந்து ஓராண்டு கடந்தும், இதுவரை கட்டு மான பணிகள் முடியவில்லை. மாவட்ட கலெக்டர், மாவட்டத்திற்கு என நியமிக்கப்பட்ட கண்காணிப்பு அலுவலர்கள், தொகுதி எம்.எல்.ஏ., சுகாதாரத்துறை துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் என உயர்மட்ட அதிகாரிகள் வரை பலரும் ஆய்வு செய்தும் நிறுத்தப்பட்ட பணி துவங்காமல் கிடப்பில் போடப்பட்டுள்ளது. இதேபோல் திருக்கோவிலுாரில் ரூ.3 கோடியி ல் கடந்த 2023ம் ஆண்டு ஆகஸ்ட் 14ம் தேதி, தெப்பகுளம் பணி துவங்கப்பட்டது. சரியான திட்ட செயல்பாடு இன்றி, புதிய வழித்தடத்தில் தண்ணீர் கொண்டு செல்லும் செயல்படுத்த முடியாத திட்டத்தை செயல்படுத்தியால் பணிகள் பாதியில் நிற்கிறது. பழமையான பாதாள கால்வாயை குறைந்த செலவில் சீரமைப்பு பணி மேற்கொள்வதற்கு பதிலாக, புதிய வழித்தடத்தில் அதிக செலவில் குழாய் பதிக்கும் திட்டம் செயல்படுத்த முடியாமல் கிடப்பில் போடப்பட்டு கிடக்கிறது. அடுத்ததாக புதிய பஸ் நிலையம் ரூ.3.60 கோடிக்கு நிலப்பரிவர்த்தனை, நில எடுப்பு உள்ளிட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு கடந்த செப்டம்பர் மாதம் 11ம் தேதி கட்டுமானத்திற்கான பூமி பூஜை போடப்பட்டது. நுழைவாயில் பகுதியில் நில எடுப்பு பணி காரணமாக கட்டுமான பணி நிறுத்தி வைக்கப்பட்டு இருப்பதாக கூறப்பட்ட நிலையில் அதற்கான அறிவிப்பு வெளியாகி மாதக்கணக்கில் ஆகியும் இன்னும் கட்டுமான பணி துவங்கவில்லை. திருக்கோவிலுார் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை துவங்கியதற்கு பின்னர் துவங்கப்பட்ட கள்ளக்குறிச்சி கலெக்டர் அலுவலகம் பணி நிறைவடைந்து முதல்வர் ஸ்டாலின் திறந்து வைக்க உள்ளார். அதேபோல் கள்ளக்குறிச்சி பஸ் நிலையத்துடன், திருக்கோவிலுார் பஸ் நிலைய கட்டுமான பணிக்கான அறிவிப்பு வெளியானது. கள்ளக்குறிச்சி பஸ் நிலைய பணி 70 சதவீதம் நிறைவடைந்து விட்ட நிலையில், திருக்கோவிலுார் பஸ் நிலையத்துக்கான கட்டுமான பணி இன்னும் துவங்கவே இல்லை. கள்ளக்குறிச்சி கலெக்டர் அலுவலக திறப்பு விழாவிற்கு முதல்வர் ஸ்டாலின் வருகை தரும் பொழுது திருக்கோவிலுார் அரசு மருத்துவமனை திறந்து வைப்பார் என கூறப்பட்டது. ஆனால், கட்டுமான பணிகள் அனைத்தும் கிடப்பில் போடப்பட்டிருப்பதும், பஸ் நிலைய கட்டுமான பணி துவங்காமலேயே நிறுத்தி வைக்கப்பட்டு இருப்பது, தெப்பக்குளம் சீரமைப்பு பணி துவங்கிய நிலையிலேயே கிடப்பில் போடப்பட்டு இருப்பதிற்கு காரணம், ஆட்சியாளர்களா, அதிகாரிகளா? என கேள்வி எழுந்துள்ளது. சட்டசபை தேர்தல் நெருங்கவுள்ள நிலையில், திருக்கோவிலுாரில் பகுதியில் துவங்கப்பட்ட முக்கிய திட்டங்கள் கிடப்பில் போடப்பட்டு கிடப்பது பொதுமக்களிடம் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.