சொத்து அபகரித்த வழக்கில் ஆவண எழுத்தர் கைது
கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சி அருகே போலி ஆவணம் பயன்படுத்தி சொத்தை அபகரித்த வழக்கில், ஆவண எழுத்தரை போலீசார் கைது செய்தனர். கள்ளக்குறிச்சி அடுத்த ரங்கநாதபுரத்தை சேர்ந்தவர் சீனிவாசன் மனைவி அமுதா, 59; இவருக்கு சொந்தமான அரியபெருமானுார் கிராம எல்லையில் உள்ள 660 சதுரடி நிலத்தை போலி ஆவணம் பயன்படுத்தி சிலர் அபகரித்தனர். இது குறித்து அமுதா அளித்த புகாரின் பேரில், ராஜேந்திரன் மனைவி கல்யாணி, இவரது மகன் செந்தில், பிச்சபிள்ளை மகன் சிவக்குமார் மற்றும் ஆவண எழுத்தர் செல்வம், வழக்கறிஞர்கள், சார்பதிவாளர்கள் என மொத்தம் 9 பேர் மீது கடந்த ஜூன் மாதம் கள்ளக்குறிச்சி போலீசார் வழக்கு பதிந்தனர். இதில், ராஜேந்திரன் மகன் செந்தில், 42; கடந்த 10ம் தேதி கைது செய்யப்பட்டார். இந்நிலையில், வில்லங்கம் பார்க்காமல் பட்டா ஆவணத்தை மட்டும் வைத்து கல்யாணி மற்றும் செந்தில் ஆகியோருக்கு தான செட்டில்மென்ட் ஆவணத்தை தயார் செய்து கொடுத்த ஆவண எழுத்தர் செல்வம், 53; என்பவரை கள்ளக்குறிச்சி போலீசார் நேற்று கைது செய்தனர்.