கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 17,599 விவசாயிகள், தாங்கள் சாகுபடி செய்துள்ள 14,980 ஹெக்டேர் பரப்பளவில் நெல், உளுந்து, மணிலா, கரும்பு பயிர்களுக்கு காப்பீடு செய்துள்ளனர். கள்ளக்குறிச்சி மாவட்டம் விவசாய தொழிலை சார்ந்தது ஆகும். இங்குள்ள மணிமுக்தா, கோமுகி ஆகிய இரு டேம்களின் மூலமாக ஆறு, ஏரிகளில் தண்ணீர் பெற்று விவசாயம் செய்யப்படுகிறது. பொதுப்பணித்துறையின் கீழ் 335 ஏரிகளும், ஊராட்சி ஒன்றியங்கள் கட்டுப்பாட்டில் 380 ஏரிகள் உள்ளது. இப்பகுதியில் நெல், கரும்பு, மரவள்ளிக்கிழங்கு, மக்காச்சோளம், மஞ்சள் போன்ற பயிர்கள் அதிகமாக சாகுபடி செய்யப்படுகின்றன. புயல், மழைக்காலங்களில் இரு அணைகளின் பாதுகாப்பு கருதி அதிகளவு திறந்துவிடப்படும் தண்ணீரால் விளை நிலங்கள் தண்ணீரில் மூழ்கி சாகுபடி பாதிக்கப்பட்டுகிறது. இதனால் ஆண்டுதோறும் விவசாயிகளுக்கு மகசூல் இழப்பு ஏற்பட்டு விவசாயிகளுக்கு கடன் சுமை ஏற்படுகிறது. இந்த இழப்புகளை ஈடு செய்யும் வகையில் பிரதமரின் பயிர் காப்பீடு திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அதன்படி நடப்பாண்டில் சாகுபடி செய்யப்பட்டுள்ள காரீப் சிறப்பு பருவம் மற்றும் ரபி பருவத்தில் பயிர் காப்பீடு திட்டம் செயல்படுத்தப்படுகிறது. மாவட்டத்தில் காரீப் சிறப்பு பருவத்திற்கு 9 வட்டாரங்களில் உள்ள 562 கிராமங்களில் நெல் பயிருக்கும், 22 குறு வட்டங்களில் உள்ள உளுந்து, மணிலா, கரும்பு பயிருக்கும் காப்பீடு செய்ய அறிவுறுத்தப்பட்டது. இதில் நெல், உளுந்து பயிருக்கு கடந்த 15-ம் தேதி, மணிலாவிற்கு வரும் டிச.30, கரும்புக்கு வரும் மார்ச் 31-ம் தேதி கடைசி நாளாகும். இதை தொடர்ந்து விவசாயிகள் நலனுக்காக நெல் பயிருக்கு காப்பீடு செய்யும் கால அவகாசம் நவ.30 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இதில் நெல் (சம்பா) ஏக்கருக்கு 538 ரூபாயும், மணிலா ரூ.462ம். கரும்பு ரூ.2,851ம் காப்பீட்டு தொகையாக செலுத்த அறிவுறுத்தப்பட்டது. அதன்படி கடந்த 19ம் தேதி வரை மாவட்டத்தில் 3,357 விவசாயிகள் தாங்கள் சாகுபடி செய்துள்ள 2,579 ஹெக்டேர் பரப்பிலான நெல் (சம்பா) பயிருக்கு காப்பீடு செய்துள்ளனர். இதில் உளுந்து பயிருக்கு 12,716 விவசாயிகள் 10,805 ஹெக்டேருக்கும், பருத்தி பயிருக்கு 19 விவசாயிகள், 10 ஹெக்டேருக்கும், மக்காச்சோளம் பயிருக்கு 1,416 விவசாயிகள் 1,384 ஹெக்டேருக்கும் , மணிலா பயிருக்கு 88 விவசாயிகள் 18 ஹெக்டேருக்கும் , கரும்பு பயிருக்கு 3 விவசாயிகள் 3 ஹெக்டேருக்கும் என மொதம் 17,599 விவசாயிகள் 14,980 ஹெக்டேர் பரப்பளவில் தாங்கள் சாகுபடி செய்துள்ள பயிர்களுக்கு காப்பீடு செய்துள்ளனர். மாவட்டத்தில் நெல், மணிலா, கரும்பு சாகுபடி செய்துள்ள விவசாயிகள் அரசு அறிவித்த கால அவகாசத்திற்குள் காப்பீடு செய்து பயன்பெற வேண்டும் என வேளாண் இணை இயக்குனர் சத்தியமூர்த்தி அறிவுறுத்தி உள்ளார்.