| ADDED : நவ 21, 2025 05:26 AM
தியாகதுருகம்: தியாகதுருகம் அருகே ரூ. 56.47 கோடி மதிப்பில் புதிய அரசு மாதிரி பள்ளி கட்டுமானப் பணிகள் முடிந்து திறப்பு விழாவுக்கு தயாராகி வருகிறது. தியாகதுருகம் அடுத்த நாகலுார் மற்றும் வட பூண்டி ஊராட்சி எல்லையில் ரூ 56.47 கோடி மதிப்பில் புதிய மாவட்ட அரசு மாதிரி பள்ளி கட்ட 2024ம் ஆண்டு நிதி ஒதுக்கப்பட்டது. நாகலுார் அரசு மேல்நிலைப்பள்ளி அருகே 4.5 ஏக்கர் இடத்தில், ரூ.19.33 கோடி மதிப்பில் வகுப்பறை கட்டடம். ரூ. 37.14 கோடி மதிப்பில் ஆண், பெண் ஆகியோருக்கு தலா 4 மாடிகள் கொண்ட தனித்தனி விடுதி கட்டடம் கட்டும் பணி இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. விடுதியில் சமையலறை, உணவு உண்ணும் கூடம் மற்றும் லிப்ட் வசதி செய்யப்பட்டுள்ளது. வரும் கல்வி ஆண்டில் இருந்து புதிய கட்டடத்தில் அரசு மாவட்ட மாதிரி பள்ளி இயங்க உள்ளது. 6 முதல் பிளஸ் 2 வரை 784 பேர் வரை தங்கி படிக்க வசதி செய்யப்பட்டுள்ளது. இதில், பள்ளி கட்டடத்தின் கட்டுமான பணிகள் முடிந்து திறப்பு விழாவுக்கு தயாராக உள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டர் அலுவலகம் திறப்பு விழாவின்போது, மாதிரி பள்ளி கட்டடமும் திறக்கப்பட உள்ளது.