| ADDED : டிச 04, 2025 05:37 AM
கள்ளக்குறிச்சி: வாக்காளர் பட்டியல் தீவிர திருத்தப்பணி வரும் 11ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டு, வரைவு வாக்காளர் பட்டியல் வரும் 16ம் தேதி வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து கலெக்டர் பிரசாந்த் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு; கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் எஸ்.ஐ.ஆர்., எனும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணியை ஓட்டுச்சாவடி நிலை அலுவலர்கள் கடந்த நவ. 4 முதல் நடந்து டிச. 4 வரை நடத்த திட்டமிடப்பட்டது. இந்நிலையில் கணக்கெடுப்பு பணிக்காலம், இந்திய தேர்தல் ஆணையத்தால் வரும் டிச.11 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. வரைவு வாக்காளர் பட்டியல் வரும் டிச.16 அன்று வெளியிடப்பட உளளது. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 4 சட்டசபை தொகுதிகளில் ஓட்டுச்சாவடி நிலை அலுவலர்களால் வீடு வீடாகச் சென்று கணக்கெடுப்பு செய்யப்பட்டதில், இறந்து போன வாக்காளர்கள், நிரந்தரமாக இடம் பெயர்ந்த வாக்காளர்கள், இரட்டை பதிவு கொண்ட வாக்காளர்கள், காணப்படாத வாக்காளர்கள் மற்றும் இதர வாக்காளர்கள் குறித்த விவரங்களை கண்டறியப்பட்டுள்ளது. மேற்படி பட்டியல் விவரத்தினை ஓட்டுச்சாவடி அலுவலர்கள் தங்களது பாகத்திற்கு நியமனம் செய்யப்பட்ட ஓட்டுச்சாவடி முகவர்களுடன் கூட்டம் நடத்தி மேற்படி பட்டியல் விவரத்தினை தெரிவிக்க வேண்டும். பட்டியல் தொடர்பாக ஏதேனும் கருத்துக்கள் இருப்பின் எழுத்துப்பூர்வமாக நாளை 5ம் தேதி மாலை 5:00 மணிக்குள் தெரிவிக்க வேண்டும். மேலும் ஓட்டுச்சாவடி மையங்களில் சிறப்பு உதவி மையத்தை வரும் 7ம் தேதி காலை 9:30 மணி முதல் மாலை 5:00 மணி வரை அமைக்க வேண்டும். எனவே, கணக்கெடுப்பு படிவங்கள் இது நாள்வரை சமர்ப்பிக்காத வாக்காளர்கள், சிறப்பு உதவி மையங்களை அணுகி பயன் பெறலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.