| ADDED : டிச 29, 2025 06:18 AM
கள்ளக்குறிச்சி: கச்சிராயபாளையம் சாலை அம்மன் நகர் பகுதியில் சாலை விரிவாக்கம் பணிகள் நடந்து வருகிறது. கள்ளக்குறிச்சியிலிருந்து கச்சிராயபாளையம் செல்லும் சாலை மிகவும் குறுகலாக உள்ளது. இச்சாலையில் கலெக்டர் அலுவலகம், கல்வித்துறை அலுவலகம், டி.எஸ்.பி., விதை சுத்திகரிப்பு நிலையம், அரசு பள்ளி, அரசு மருத்துவமனை மற்றும் அரசு சர்க்கரை ஆலை இயங்கி வருகின்றன. இதனால் தினமும் இச்சாலை வாகன நெருக்கத்தால் திணறி வருகிறது. கள்ளக்குறிச்சி நகரப்பகுதியில் உள்ள சாலைகளை அகலப்படுத்த வேண்டும் என பொதுமக்கள் பல ஆண்டுகளாக கோரிக்கை விடுத்து வந்தனர். அதனைத்தொடர்ந்து, நெடுஞ்சாலைத்துறை சார்பில் நகர்ப்புற அபிவிருத்தி திட்டத்தின்கீழ் கச்சிராயபாளையம் சாலையில் நகரை ஒட்டியுள்ள 3 கி.மீ., சாலை விரிவாக்கம் செய்யப்பட்டன. இதனால் இப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் குறைந்தது. இந்நிலையில் போக்குவரத்து நெரிசலை மேலும் கட்டுப்படுத்த, நகர்புற சாலை மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.3 கோடி மதிப்பில் அம்மன் நகர் பகுதியில் 800 மீ., தொலைவிற்கு அகலப்படுத்தும் பணிகள் துவங்கி நடந்து வருகிறது. பணிகளை கள்ளக்குறிச்சி நெடுஞ்சாலைத்துறை கோட்ட பொறியாளர் நாகராஜன், உதவி இயக்குனர் ராதாகிருஷ்ணன் மேற்பார்வையில் உதவி பொறியாளர் சுதாகர் தலைமையிலான ஊழியர்கள் மேற்கொண்டு வருகின்றனர். இப்பணிகள் வரும் ஜனவரி மாதம் முடியும் என தெரிவிக்கப்பட்டது.