உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / கோமுகி ஆறு மேம்பாலம் பணி இறுதிக்கட்டத்தை எட்டியது: விரைவில் வாகன போக்குவரத்து துவங்க உள்ளது

கோமுகி ஆறு மேம்பாலம் பணி இறுதிக்கட்டத்தை எட்டியது: விரைவில் வாகன போக்குவரத்து துவங்க உள்ளது

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி புறவழிச்சாலையில் கோமுகி ஆற்றின் குறுக்கே அமைக்கப்பட்ட உயர்மட்ட பாலம் பணிகள் முடிந்துள்ளதால் விரைவில் வாகன போக்குவரத்து துவங்க உள்ளது. உளுந்துார்பேட்டை - சேலம் வரையிலான 136 கி.மீ., புறவழிச்சாலை, நான்கு வழிச்சாலையாக மாற்றப்பட்டு கடந்த 2013ம் ஆண்டு பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டது. இதில் வாகன போக்குவரத்து குறைவு காரணம் காட்டி உளுந்துார்பேட்டை, எலவனாசூர்கோட்டை, தியாகதுருகம், கள்ளக்குறிச்சி, சின்னசேலம், ஆத்துார், வாழப்பாடி, உடையாப்பட்டி, அம்மாபேட்டை ஆகிய 9 இடங்களில் புறவழிச்சாலைகள் அனைத்தும் இரு வழிச்சாலையாக அமைக்கப்பட்டது.இந்நிலையில் உளுந்துார்பேட்டை - சேலம் தேசிய நெடுஞ்சாலையில் வாகன போக்குவரத்து அதிகரித்தது. அதில், இரு வழிச்சாலையாக இருந்த பகுதிகளில் அடிக்கடி விபத்துகள் ஏற்பட்டு, ஆயிரக்கணக்கான உயிர்கள் பறிபோனது. இதனையடுத்து இருவழிச் சாலைகள் உள்ள இடங்களில் நான்கு வழிச்சாலை மாற்ற வேண்டும் என காவல் துறை, மாவட்ட நிர்வாகம் மற்றும் எம்.பி., -எம்.எல்.ஏ.,க்கள் உட்பட பல்வேறு தரப்பில் தேசிய நெடுங்சாலை துறை அதிகாரிகளுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டது. அதன் பின் இரு வழிச்சாலைகள், நான்கு வழிச்சாலைகளாக அகலப்படுத்தும் பணி மேற்கொள்ளப்பட்டது. அதில், கள்ளக்குறிச்சி கோமுகி ஆற்றினை தவிர, மற்ற மேம்பாலம் உள்ள இடங்களில் ஏற்கனவே பாலம் அமைக்கப்பட்டது. இதனால் மற்ற இடங்களில் மண் கொட்டி சமன்படுத்தி தார்சாலை அமைக்கப்பட்டு பணிகள் எளிதாக நடைபெற்றது. கள்ளக்குறிச்சி புறவழிச்சாலையில் கோமுகி ஆற்றின் குறுக்கே புதிதாக உயர்மட்ட பாலம் கட்டும் பணிகளும் கடந்த ஆண்டு துவங்கி தொடர்ந்து நடந்தது. அதில் ஆற்றின் குறுக்கே 5 துாண்களுடன் அமைக்கப்பட்ட உயர்மட்ட பாலம் வாகன போக்குவரத்துக்கு ஏற்ப முழுவதும் கட்டி முடிக்கப்பட்டுள்ளது. தற்போது உயர்மட்ட பாலம் பகுதியில் பக்கவாட்டு திசையில் மண் சரிவு ஏற்படாமல் இருப்பதற்கான கருங்கற்கள் புதைக்கும் பணிகள், சென்டர் மீடியனில் மண் நிரப்புதல் போன்ற இறுதி கட்ட பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. இதனால் விரைவில் கள்ளக்குறிச்சி தேசிய நெடுஞ்சாலையில் உள்ள கோமுகி ஆற்றின் உயர்மட்ட பாலத்தில் விரைவில் வாகன போக்குவரத்து துவங்குவதற்கான சூழல் ஏற்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







முக்கிய வீடியோ