உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / பயிர்களை நாசப்படுத்தும் பன்றிகளை கட்டுப்படுத்த நடவடிக்கை... தேவை

பயிர்களை நாசப்படுத்தும் பன்றிகளை கட்டுப்படுத்த நடவடிக்கை... தேவை

திருக்கோவிலூர் : காட்டுப் பன்றிகளின் தொல்லையால் கரும்பு, மக்காச்சோளம், கம்பு, மணிலா உள்ளிட்ட பயிர்கள் சேதமாவதாக திருக்கோவிலூர் பகுதி விவசாயிகள் புலம்புகின்றனர்.திருக்கோவிலூர் சுற்றுவட்டார பகுதிகளில் காப்புக் காடுகளை ஒட்டி இருக்கும் கிளியூர், நத்தாமூர், குன்னத்தூர், அத்திப்பாக்கம், நெடுங்கம்பட்டு, பாடியந்தல் என பல கிராமங்களில் மான், காட்டுப்பன்றி, மயில் உள்ளிட்ட வனவிலங்குகளின் படையெடுப்பால் விவசாயம் பெருமளவில் பாதிக்கப் பட்டிருக்கிறது.இதனை ஆண்டாண்டு காலமாக இவர்கள் எதிர்கொண்டு இருப்பதால், வனவிலங்குகளால் பாதிப்பு ஏற்படாத மாற்று பயிருக்கு மாறி விட்டனர். ஆனால் தற்பொழுது காடுகளையும் தாண்டி சு.பில்ராம்பட்டு சித்தலிங்கமடம், மெய்யூர் என கிராம பகுதிகளில் காட்டுப் பன்றிகளின் படையெடுப்பு அபரிமிதமாக அதிகரித்துள்ளது. அத்துடன் மயில்களின் எண்ணிக்கையும் கணிசமாக பெருகிவிட்டது. மயில்களால் பெரிய அளவில் விவசாயத்திற்கு பாதிப்பு இல்லை என்ற போதிலும், காட்டுப்பன்றிகளால் கரும்பு, மக்காச்சோளம், மணிலா, கம்பு உள்ளிட்ட பயிர்களுக்கு பெருமளவில் சேதம் ஏற்படுகிறது.கூட்டமாக நுழையும் காட்டுப் பன்றிகள் ஒரே நாள் இரவில் பல ஏக்கர் மக்காச்சோள பயிரை கடித்து குதறி விடுகிறது. பல கரும்பு தோட்டங்களில் காட்டுப்பன்றிகள் குட்டி போட்டு, இனப்பெருக்கம் செய்து நிரந்தரமாகவே தங்கி விடுகிறது. கரும்பை வெட்ட தோட்டத்திற்குள் செல்லும் போதுதான் கரும்பு பயிர் எந்த அளவிற்கு அழிக்கப்பட்டு இருக்கிறது என்பதை விவசாயிகள் உணர முடிகிறது. இதனால் விவசாயிகள் பெருமளவில் பாதிக்கப்படுகின்றனர். அதிகரித்துவிட்ட காட்டுப்பன்றியை கட்டுப்படுத்த வனத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாதிக்கப்படும் விவசாயிகள் தொடர்ந்து அரசுக்கு கோரிக்கை விடுத்து வருகின்றனர். எனினும் அரசு இதன் மீது உரிய நடவடிக்கை எடுக்காததால், விவசாயிகள் தாங்களே சட்ட விரோதமாக மின்வேலிகளை அமைத்து, கம்பி தடுப்புகள் மூலம் காட்டுப்பன்றி, மான் உள்ளிட்ட வனவிலங்குகளை தடுக்க முயற்சிக்கின்றனர். இது பலரது உயிரைக் குடிக்கும் நிகழ்வாக அமைந்து விடுகிறது. பயிரைக் காப்பாற்ற விவசாயிகள் மேற்கொள்ளும் விழிப்புணர்வு இல்லாத சட்ட விரோத நடவடிக்கை மூலம் அவர்களும் இன்னலுக்கு ஆளாகின்றனர்.கேரளாவில் காட்டுப்பன்றிகளை கட்டுப்படுத்த அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. அதன்படி உள்ளாட்சி அமைப்புகளின் நிர்வாகிகள் மேற்பார்வையில், துப்பாக்கிச் சுடும் பயிற்சி பெற்ற நபர்கள் மூலம், வனத்துறை சார்பில் காட்டுப்பன்றிகள் கட்டுப்படுத்தும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக கம்யூனிஸ்டு கட்சியினர் தெரிவிக்கின்றனர்.இதேபோல் தமிழகத்திலும் காட்டுப்பன்றியை கட்டுப்படுத்த வேண்டும் என பாதிக்கப்படும் விவசாயிகள் அரசுக்கு கோரிக்கை விடுக்கின்றனர். அத்துடன் வனவிலங்குகளால் பாதிக்கும் பயிர்களுக்கு இழப்பீடு வழங்க வனத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கையும் வலுத்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை