| ADDED : ஜன 31, 2024 02:12 AM
கள்ளக்குறிச்சி : வீடு தேடி திட்டம் தருவது பா.ஜ., ஆட்சி, அதில் ஸ்டிக்கர் ஒட்டி ஏமாற்றுவதுதான் தமிழகத்தில் தி.மு.க.,வின் ஆட்சி என கள்ளக்குறிச்சியில் நடந்த என், என் மக்கள் பாத யாத்திரையில் மாநில தலைவர் அண்ணாமலை பேசினார்.அம்பேத்கர் சிலை அருகே நடந்த கூட்டத்தில் அவர் பேசியதாவது : தமிழகத்தில் ஊழலற்ற ஆட்சி அமைந்திட வேண்டியே நான் அரசியலுக்கு வந்துள்ளேன். தற்போது தமிழகம் முழுவதும் குடும்ப ஆட்சி முறையே நடந்து வருகிறது. சென்னையில் ஸ்டாலின், அவரது மகன், டி.ஆர். பாலு, அவரது மகன், அன்பில் பொய்யாமொழி என தமிழகம் முழுவதும் அனைத்து அமைச்சர்களும், அவர்களின் பிள்ளைகளையே அரசியலில் நுழைத்துள்ளனர். இதனால் பல்வேறு முறைகேடுகள் நடந்து வருகிறது. சென்னை வெள்ள சேதத்திற்கு மத்திய அரசு ஒவ்வொரு வீட்டிற்கும் ரூ.6000 நிதி தந்தது. ஆனால் அதன் கவர் மட்டும்தான் தமிழக அரசினுடையது. பணம் பிரதமர் நரேந்திர மோடி தந்ததாகும். வீடு தேடி திட்டங்கள் தருவது மத்திய பா.ஜ., அரசு. ஆனால் அதில் ஸ்டிக்கர் ஒட்டி, தமிழக மக்களை ஏமாற்றுவதுதான் தி.மு.க.வின் சாதனை.இதனை அடியோடு களைந்திட, மக்கள் வரும் 2024 தேர்தலில் நல்ல பாடம் புகட்ட வேண்டும். வரும் தேர்தலில் பிரதமர் மோடி தலைமையிலான பா.ஜ., 400 சீட்களை கைப்பற்றும்.கள்ளக்குறிச்சி உட்பட தமிழகத்திலிருந்து 39 எம்.பி.,க்களையும், நமது கட்சியினரையே வெற்றிபெற செய்து, லஞ்ச லாவண்யம் இல்லாத தமிழகத்தினை தேசியத்தை நோக்கி பயணிக்க செய்ய வேண்டியது நமது கடமையாகும் என அண்ணாமலை பேசினார்.