உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / கூரை வீட்டில் தீ விபத்து; தம்பதி உடல் கருகி பலி

கூரை வீட்டில் தீ விபத்து; தம்பதி உடல் கருகி பலி

கச்சிராயபாளையம் : கச்சிராயபாளையம் அருகே கூரை வீடு தீ பிடித்து எரிந்த விபத்தில் வயதான தம்பதி உடல் கருகி இறந்தனர்.கள்ளக்குறிச்சி மாவட்டம், கச்சிராயபாளையம் அடுத்த மாத்துார் கிராமத்தைச் சேர்ந்தவர் சீனிவாசன், 70; இவரது மனைவி அகிலாண்டம், 65; இவர்களுக்கு 4 மகன்கள் உள்ளனர். அனைவருக்கும் திருமணமாகி தனித்தனியாக வசித்து வருகின்றனர். சீனிவாசனும், அகிலாண்டமும், தனியாக கூரை வீட்டில் வசித்து வந்தனர்.நேற்று முன்தினம் இரவு 10:30 மணியளவில் இருவரும் வீட்டில் துாங்கிக் கொண்டிருந்தபோது, வீடு திடீரென தீ பிடித்து எரிந்தது. அதில், இருவரும் வெளியேற முடியாமல் வீட்டிற்குள் சிக்கினர்.கள்ளக்குறிச்சி தீயணைப்பு நிலைய அலுவலர் ஜமுனாராணி தலைமையில் தீயணைப்பு படையினர் விரைந்து சென்று தீயை அணைத்தனர். உள்ளே சென்று பார்த்தபோது சீனிவாசனும், அகிலாண்டமும் உடல் கருகி இறந்து கிடந்தனர்.கள்ளக்குறிச்சி டி.எஸ்.பி., ரமேஷ், சின்னசேலம் இன்ஸ்பெக்டர் ராஜாராம் மற்றும் கச்சிராயபாளையம் போலீசார் இறந்த தம்பதியின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். முதற்கட்ட விசாரணையில் மின்கசிவு காரணமாக வீடு தீ பிடித்து எரிந்தது தெரியவந்தது.அதனைத் தொடர்ந்து, சின்னசேலம் தாசில்தார் கமலக்கண்ணன், கள்ளக்குறிச்சி மின்வாரிய உதவி செயற் பொறியாளர் அருள்சாமி மற்றும் விழுப்புரம் தடய அறிவியல் நிபுணர் சுரேஷ் தலைமையிலான குழுவினர் சம்பவ இடத்தில் தடயங்களை சேகரித்தனர்.சீனிவாசன் மகன் அய்யாசாமி கொடுத்த புகாரின் பேரில் கச்சிராயபாளையம் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்