| ADDED : ஜன 06, 2024 06:20 AM
உளுந்தூர்பேட்டை : உளுந்தூர்பேட்டை பகுதியில் ஆக்கிரமிப்பு, வாகனங்களை சாலையிலேயே நிறுத்துவதால் தினசரி போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுவருவதால் வாகன ஓட்டிகள் திணறி வருகின்றனர்.உளுந்தூர்பேட்டை பகுதி சென்னை, சேலம், திருச்சி,மதுரை, வேலூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளின் மையப் பகுதியாக உள்ளது. இதனால் உளுந்தூர்பேட்டை வழியாக தினசரி ஆயிரக்கணக்கான வாகனங்கள் வந்து சென்ற வண்ணம் இருப்பதால் வாகன போக்குவரத்து 24 மணி நேரமும் பிசியாக இருக்கிறது.இத்தகைய முக்கியத்துவம் வாய்ந்த உளுந்தூர்பேட்டை பகுதியில் வாகனங்கள் எளிதில் செல்ல முடியாமல் பொதுமக்களும், வாகன ஓட்டிகளும் தினசரி அவதிப்பட்டு வருகின்றனர். பஸ் நிலையம் அருகே, சென்னை சாலை, திருவெண்ணைநல்லூர் சாலை பகுதிகளில் சாலையிலேயே வாகனங்களை நிறுத்துவதால் வாகனங்கள் செல்ல முடியாமல் திணறுகின்றன.சாலையோர கடைகள், சாலை ஆக்கிரமிப்புகள் இரு பக்கமும் அதிகரித்துள்ளதாலும் வாகன போக்குவரத்து பாதிப்பு மற்றும் வாகன நெரிசல் ஏற்பட்டு வருவது தொடர் கதையாகி வருகிறது.தீபாவளி, பொங்கல் உள்ளிட்ட முக்கிய பண்டிகை காலங்களில் அதிக வாகன போக்குவரத்து இருக்கும் நேரத்தில் போக்குவரத்து நெரிசல், போக்குவரத்து பாதிப்பு ஏற்படுவது வழக்கம். ஆனால் தற்போது உளுந்துார்பேட்டையில் தினசரி வாகன போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டு வருவது பொது மக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.சாலையோர வாகனங்களை ஒழுங்குபடுத்த வேண்டிய போக்குவரத்து போலீசார் மற்றும் நகர போலீசார் எந்த வித நடவடிக்கையும் எடுப்பது இல்லை. வாகனங்கள் சாலையில் நிற்பதால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருவதால் மாணவர்கள், முதியவர்கள், வாகன விபத்தில் சிக்கும் அபாய நிலை உள்ளது.குறிப்பிட்ட நேரத்தில் அப்பகுதியை கடப்பதில் மிகுந்த சிரமம் ஏற்பட்டு வருவது தொடர் கதையாகி வருகிறது. இதனால் நீண்ட தூரம் பயணம் செய்யும் விரைவு பஸ்கள் உளுந்தூர்பேட்டை பகுதிக்குள் செல்லாமல் புறவழிச் சாலைகளிலேயே செல்வதால் பயணிகள் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.எனவே நகராட்சி நிர்வாகம், போலீசார், நெடுஞ்சாலைத் துறையினர் சாலையோர ஆக்கிரமிப்புகளை முற்றிலும் அகற்றி அனைத்து வாகனங்களும் ் எளிதில் செல்லும் வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.