கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சி மாவட்டத்தின் வளர்ச்சிப் பணிகளுக்காக, அரசு ஏராளமான திட்டங்களை அறிவித்துள்ளது. இப்பணிகளை விரைவுபடுத்திட மாவட்ட நிர்வாகத்தை, முதல்வர் அறிவுறுத்த வேண்டும் என பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர். கள்ளக்குறிச்சியில் புதிய புறநகர் பஸ் நிலையம் அமைப்பதற்கு, ஏமப்பேர் ரவுண்டானா பகுதியில் நடைபெறும் பணிகளை துரிதப்படுத்த வேண்டும். நகரில் போக்குவரத்து நெரிசலைத் தவிர்ப்பதற்காக, ரிங் ரோடு அமைக்க திட்டமிடப்பட்டு, முதல் கட்டமாக நிலம் எடுப்பிற்கு 73 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதற்கான பணிகளை விரைவுப்படுத்த வேண்டும். உளுந்துார்பேட்டையில் 1,350 கோடி ரூபாயில், தோல் இல்லா காலணி தொழிற்சாலை அமைக்கப்பட்டு வருகிறது. சின்னசேலம் புதிய பஸ் நிலையம் மற்றும் வாரசந்தை பணிகள், ஒரு கோடியே 98 லட்சம் ரூபாய் மதிப்பில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இப்பணிகளை விரைந்து செயல்படுத்திட நடவடிக்கை எடுக்க வேண்டும். கள்ளக்குறிச்சியில் அரசு பொறியியல் கல்லுாரி மற்றும் சட்ட கல்லுாரி அமைக்க வேண்டும். மாவட்டத்தில் அதிகளவில் மரவள்ளி பயிரிடப்படுவதால், சேகோ தொழிற்சாலை அமைக்க வேண்டும். கள்ளக்குறிச்சி மின் மயான வளாகத்தில் குப்பைகள் சேமிக்கப்படுவதை தவிர்த்து, மாற்று இடம் தேர்வு செய்து மறுசுழற்சி செய்திட நடவடிக்கை எடுக்க வேண்டும். மாவட்டத்தில் 'சோலார் டிரையர்' வசதியுடன் தானிய சேமிப்பு கிடங்குகள் அமைக்க வேண்டும். சூளாங்குறிச்சி மணிமுக்தா அணை மற்றும் கல்வராயன்மலை அடிவாரத்தில் உள்ள கோமுகி அணையை துார்வார நடவடிக்கை எடுக்க வேண்டும். சோமண்டார்குடி - அரசு கலைக் கல்லுாரி, ரோடுமாமந்துார்- க.மாமனந்தல், விருகாவூர் -அசகளத்துார் இடையே கோமுகி ஆற்றின் குறுக்கே உயர்மட்ட பாலம் அமைக்க வேண்டும். இயற்கை எழில் மிகுந்த கல்வராயன்மலையில் உள்ள நீர் வீழ்ச்சிகள், படகு குழாம், விளையாட்டு திடல் போன்றவற்றை மேம்படுத்தி, சுற்றுலா தளமாக அறிவிக்க வேண்டும். கல்வராயன்மலை பகுதியில் செயல்படாமல் உள்ள கடுக்காய் தொழிற்சாலையை பயன்பாட்டிற்கு கொண்டு வரவேண்டும். இப்பகுதியைச் சேர்ந்த மலைவாழ் மக்கள் மேம்பாட்டிற்காக உள்ளூரிலேயே வேலை வாய்ப்பு ஏற்படுத்திட வேண்டும். கல்வராயன்மலை அடிவாரத்தில் கல்படை ஆற்றின் குறுக்கே தடுப்பணை அமைக்க வேண்டும். கச்சிராயபாளையம் கூட்டுறவு சர்க்கரை ஆலையில் இணை மின் உற்பத்தி நிலைய பணிகளை விரைவுபடுத்த வேண்டும். வரலாற்று சிறப்புமிக்க தியாகதுருகம் மலையை சுற்றுலா தளமாக அறிவிக்க வேண்டும். தியாகதுருகம் பேரூராட்சியை தரம் உயர்த்துவதுடன், தியாகதுருகம் வாரசந்தை வளாகத்தில் கடைகள் அமைத்திட வேண்டும். தியாகதுருகம் தீயணைப்பு நிலையத்திற்கு சொந்த கட்டடம் அமைக்க வேண்டும். தியாகதுருகத்தில் மாட்டிறைச்சி கூடம் அமைக்க வேண்டும். திருக்கோவிலுார் புதிய பஸ் நிலைய பணிகளை விரைந்து துவக்கிட வேண்டும். திருக்கோவிலுாரில் தெப்பகுளம் சீரமைப்பு பணிகள் மற்றும் உயர்மட்ட பாலம் பணிகளை விரைந்து செயல்படுத்திட வேண்டும். திருக்கோவிலுார் தொகுதியில் உள்ள 20 ஊராட்சிகளை, விழுப்புரம் மாவட்டத்தில் சேர்க்கும் நடவடிக்கை குறித்த கிராம மக்கள் கோரிக்கையை பரிசீலிக்க வேண்டும். உளுந்துார்பேட்டையில் காவல் நிலையத்திற்கு புதிய கட்டடம், விளையாட்டு மைதானம், அரசு போக்குவரத்துக் கழக பணிமனையில் பயிற்சி மையம், கூட்டு குடிநீர் திட்டம், அரசு கலைக் கல்லுாரி கட்டடம் ஆகிய திட்டங்களை கொண்டு வர வேண்டும். எலவனாசூர்கோட்டை ஊராட்சியை பேரூராட்சியாக உயர்த்திட வேண்டும். ரிஷிவந்தியத்தை தலைமையிடமாகக் கொண்டு புதிய ஊராட்சி ஒன்றியம் அமைக்கப்பட வேண்டும். ரிஷிவந்தியம் அர்த்தநாரீஸ்வரர் கோவிலில் அன்னதான திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும். வாணாபுரம் தாலுகாவில் அரசு ஐ.டி.ஐ., கல்லுாரி அமைக்க வேண்டும். வாணாபுரத்தை தலைமையிடமாக கொண்டு புதிய காவல் உட்கோட்டம் அலுவலகம் மற்றும் தீயணைப்பு நிலையம் அமைக்க வேண்டும். மணிமுக்தா அணை சுற்றுப்புற பகுதியில் பூங்கா அமைத்து, சுற்றுலா மையமாக மாற்ற வேண்டும். சாத்தனுார் அணையின் வலதுபுற வாய்க்காலை நீளப்படுத்தி மணிமுக்தா அணை மற்றும் கெடிலம் நதியுடன் இணைக்க வேண்டும். சின்னசேலம் அண்ணா நகர் பகுதி, நைனார்பாளையம் சாலை மற்றும் கூகையூர் சாலையில் ரயில்வே மேம்பாலம் அமைக்க மத்திய அரசை வலியுறுத்த வேண்டும். இப்பணிகளை விரைவுபடுத்திட மாவட்ட நிர்வாகத்தை, முதல்வர் அறிவுறுத்த வேண்டும் என பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.