உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / ஆறுகளில் பெருகியுள்ள மணல் வளம்... பாதுகாக்கப்படுமா?; நிலத்தடி நீர், விவசாயம் பாதிக்கும் அபாயம்

ஆறுகளில் பெருகியுள்ள மணல் வளம்... பாதுகாக்கப்படுமா?; நிலத்தடி நீர், விவசாயம் பாதிக்கும் அபாயம்

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் சமீபத்திய மழையால் ஆறுகளில் அதிகரித்துள்ள மணல் வளத்தை பாதுகாக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். கள்ளக்குறிச்சி மாவட்டத்தின் வழியே தென்பெண்ணை ஆறு செல்கிறது. கடந்த இரு ஆண்டுகளாக ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு நீர் வளம் அதிகரித்துள்ளது. ஆற்றுப்படுகையை சுற்றியுள்ள கிராமங்களில் நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்து விவசாயம் செழிக்க இது முக்கிய ஆதாரமாக உள்ளது. அதேபோல் கெடிலம், கோமுகி, மணிமுக்தா ஆகிய ஆறுகளிலும் சமீபத்திய மழையின் போது வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதன் காரணமாக மாவட்டத்தில் உள்ள ஆறுகளில் மணல் வளம் அதிகரித்துள்ளது. இதனை குறிவைத்து மணல் திருட்டு கும்பல் தயாராகி வருகிறது. மாட்டுவண்டி, டிப்பர் ஆகியவற்றை இரவு நேரங்களில் ஆற்றுக்கு கொண்டு சென்று மணலை அள்ளிச் செல்கின்றனர். கடந்த சில ஆண்டுகளாக கட்டுமான பணிக்கு எம்.சாண்ட் பயன்படுத்தப்பட்டு வரும் நிலையில் மணல் அள்ள தடை உள்ளதால் மணலுக்கு கடும் கிராக்கி நிலவுகிறது. எம்.சாண்டை விட சுவர்களின் மேற்புற பூச்சு வேலைக்கு மணல் உறுதியாக இருக்கும் என்பதால் சொந்த வீடு கட்டுபவர்கள் இதனை அதிக விலை கொடுத்து வாங்க தயாராக உள்ளனர். இதனால் ஆறுகளில் அள்ளப்படும் மணல் இரவோடு இரவாக கட்டுமான வேலை நடக்கும் இடங்களில் கொண்டு போய் சேர்த்து விடுகின்றனர். மணல் திருட்டு கும்பலுக்கு சில அதிகாரிகளும் துணை போவதால் இதனை முற்றிலும் ஒழிக்க முடியவில்லை. ஆறுகளில் நீரைத் தக்கவைத்து நிலத்தடி நீர்மட்டம் உயர மணல் முக்கிய ஆதாரமாக விளங்குகிறது. கோமுகி மற்றும் மணிமுக்தா ஆகிய ஆறுகளில் மணல் வளம் மொத்தமும் கொள்ளையடிக்கப்பட்டு பல இடங்களில் கட்டாந்தரையாக காட்சி அளிக்கிறது. கூழாங்கற்கள் நிறைந்த மணலாக இருந்தாலும் அதனையும் அள்ளிச்சென்று ஹாலோ பிளாக் தயாரிப்பாளர்களுக்கு விற்பனை செய்து காசு பார்க்கின்றனர். இதன் காரணமாக சுற்றுவட்டாரப் பகுதியில் நிலத்தடி நீர்மட்டம் குறைந்து விவசாயம் பாதிக்க மணல் திருட்டு முக்கிய காரணியாக மாறி உள்ளது. மணல் திருட்டில் சில ஆளுங்கட்சி முக்கிய பிரமுகர்களும் சம்பந்தப்பட்டிருப்பதால் இதனை நேர்மையான அதிகாரிகள் தடுக்க முடியாமல் திணறுகின்றனர். ஒரே பதிவு எண்ணில் பல டிப்பர் லாரிகளை மணல் திருட்டுக்கு பயன்படுத்தி வருகின்றனர். ஆற்றுக்குள் வாகனங்கள் செல்வதற்கு வசதியாக பல இடங்களில் கரையை உடைத்து வழியை ஏற்படுத்தி இரவு நேரங்களில் மணலை திருடி செல்கின்றனர். சிலர் மணலை திருடி சென்று தங்களின் சொந்த நிலத்தில் கொட்டி பதுக்கி வைக்கின்றனர். ஆறுகளில் பாலம் கட்டும் வேலை நடக்கும் இடங்களில் இதை சாதகமாக பயன்படுத்தி சில ஆளுங்கட்சி பிரமுகர்கள் அப்பகுதியில் உள்ள மணலை அள்ளிச்சென்று வெளியில் அதிக விலைக்கு விற்று பன்மடங்கு லாபம் சம்பாதிக்கின்றனர். மாவட்டத்தில் விவசாயம் செழிக்க ஆறுகளில் படிந்துள்ள மணல் வளம் முக்கிய ஜீவாதாரமாக விளங்குகிறது. மணலை பாதுகாத்தால் மட்டுமே மாவட்டத்தில் நீர் வளத்தை பெருக்கி உணவு தானிய உற்பத்தி அதிகரிக்க முடியும். கோடை காலத்தில் குடிநீர் தேவையும் தட்டுப்பாடு இன்றி கிடைக்கும். இயற்கை வளத்தை அழித்து ஆற்றை மலடாக்கும் வகையில் மணலை அள்ளிச் செல்லும் சட்டவிரோத செயலை முற்றிலும் தடுத்து மீறுபவர்கள் மீது மாவட்ட நிர்வாகம் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். - நமது நிருபர் -


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை