| ADDED : பிப் 19, 2024 11:25 PM
தமிழக அமைச்சரவையில் மாற்றம் நிகழ்ந்தால் வளம்மிக்க அமைச்சர் பதவியை கைப்பற்ற கள்ளக்குறிச்சி மாவட்ட தி.மு.க.,வினர் தயாராகி வருகின்றனர்.ஒருங்கிணைந்த விழுப்புரம் மாவட்டத்தில் இருந்து பிரிக்கப்பட்டதுதான் கள்ளக்குறிச்சி மாவட்டம். இந்த மாவட்டத்தின் பொறுப்பையும் சேர்த்து நிர்வகித்து வந்தார் உயர் கல்வித்துறை அமைச்சராக இருந்த பொன்முடி.இவர் திருக்கோவிலுார் தொகுதி எம்.எல்.ஏ., என்ற வகையில் திருக்கோவிலுார், கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் இடம்பெறுவதால் கள்ளக்குறிச்சியை சேர்த்து பொறுப்பு வகிக்க காரணமாக இருந்தது.இதன் காரணமாகவே வளம்மிக்க கனிம வளம், நெடுஞ்சாலைத் துறை, பொதுப்பணித்துறை என பலமான துறையை நிர்வகித்து வரும் அமைச்சர் வேலுவுக்கு கள்ளக்குறிச்சி மாவட்டத்தின் மீதும் ஒரு கண் இருந்து கொண்டே இருக்கிறது.இதன் காரணமாக கள்ளக்குறிச்சி மாவட்ட பொறுப்பு அமைச்சராகவும் வேலு செயல்பட்டுக் கொண்டிருக்கிறார். இந்நிலையில், தனது ஆதரவாளர்களுக்கு அமைச்சர் பதவி வாங்கி கொடுத்து தன் கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்ள வேண்டும் என்ற ஆசையை அரங்கேற்ற காயை நகர்த்தி வருவதாக அவரது ஆதரவாளர்கள் தெரிவித்து வருகின்றனர்.கள்ளக்குறிச்சி வடக்கு, தெற்கு என இரண்டு மாவட்டங்களாக பிரிக்கப்பட்டு தெற்கிற்கு வசந்தம் கார்த்திகேயனும், வடக்கிற்கு உதயசூரியனும் மாவட்ட செயலாளர்களாக இருந்து வருகின்றனர்.இரண்டையும் ஒன்றாக்கி ஒரே மாவட்ட செயலாளராக்கி விட்டு, மற்றொருவருக்கு அமைச்சர் பதவி வாங்கிக் கொடுக்கவும் திட்டமிட்டு வருவதாகவும் கூறுகின்றனர்.அமைச்சர் பதவியை எப்படியும் ருசித்து விட வேண்டும் என அமைச்சரின் வழிகாட்டுதலுடன் வசந்த காலத்தை எதிர்நோக்கி காத்திருக்கிறார் அமைச்சரின் ஆதரவாளர்.கட்சியின் இரண்டாம் கட்ட தலைவர் என்ற அந்தஸ்துடன் இதுவரை அசைக்க முடியாத ஜாம்பவானாக இருந்து வந்த பொன்முடி பதவியை இழந்து கட்சித் தலைமையின் மீது மிகுந்த அதிருப்தியில் இருப்பதாக கூறப்படுகிறது.அவரது கோபத்தைப் போக்க மகனுக்கு மீண்டும் கள்ளக்குறிச்சி லோக்சபா தொகுதியை கொடுத்து இதுவரை தொகுதிக்குள் நுழையாதவாறு தடுத்து வைத்திருந்த வேலுவின் ஆதரவாளரை வைத்தே தேர்தலை எதிர்கொள்ள கட்சித் தலைமை வியூகம் வகுத்திருப்பதாக அரசியலை உற்று நோக்கும் அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர்.இந்த கணக்கெல்லாம் ஒர்க்அவுட் ஆகுமா என புலனாய்வுத் துறை மூலம் விசாரணையையும் நடத்தி வருகிறது ஆளும் அரசு. அரசியலில் எதுவும் நிகழலாம். பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.