காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் அஞ்சல் கோட்டத்தின்கீழ் செயல்படும் இந்தியா போஸ்ட் பேமென்ட் பேங்கில், ஜீரோ பேலன்சில் மாணவர்கள் சேமிப்பு கணக்கு எளிதாக துவக்கலாம். ஏழு ஆண்டுகளில், 1.47 லட்சம் பேர் அஞ்சல் துறை பரிவர்த்தனைக்கு மாறுதலாகி உள்ளனர். இதில், கல்வித்தொகை உதவி பெறுவதற்கு சவுகரியமாக, ஜீரோ பேலன்சில், 21,180 வங்கி கணக்குகளை மாணவர்கள் துவக்கி உள்ளனர்.காஞ்சிபுரம் அஞ்சல் கோட்டத்தின் கீழ் காஞ்சிபுரம், திருவள்ளூர் இரண்டு தலைமை தபால் நிலையங்கள், 55 துணை அஞ்சல் நிலையங்கள், 272 கிளை தபால் நிலையங்கள் என, 392 தபால் நிலையங்கள் இயங்கி வருகின்றன.இங்கு, செல்வ மகள் சேமிப்பு திட்டம், தொடர் வைப்பு கணக்கு, முதியோர் சேமிப்பு திட்டம், தேசிய சேமிப்பு பத்திரம், அஞ்சல் ஆயுள் காப்பீடு திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன.இந்த அஞ்சலக சேமிப்பு திட்டங்களுக்கு, 4 சதவீத வட்டியில் இருந்து, வாடிக்கையாளர்கள் எடுக்கும் திட்டங்களுக்கு ஏற்றவாறு, 8.5 சதவீதம் வட்டி வரை, அஞ்சல் துறை வழங்கி சேமிப்பு கணக்குகள் துவக்குவதை மத்திய அரசு ஊக்குவித்து வருகிறது.இது தவிர, இந்தியா போஸ்ட் பேமென்ட் பேங்க் என, அழைக்கப்படும் அஞ்சல் வங்கி கணக்கு துவக்குவது மற்றும் சோலாரில் மின்சாரம் உற்பத்தி செய்யும் திட்டம் ஆகிய திட்டங்கள் செயல்படுத்தி வருகின்றன.இதில், இந்தியா போஸ்ட் பேமென்ட் பேங்க் என, அழைக்கப்படும் அஞ்சல் வங்கிகள், 2018ம் ஆண்டு துவக்கப்பட்டன. குறைந்த கட்டணம் செலுத்தி அஞ்சல் துறை வங்கி கணக்கு துவக்கிக் கொள்ளலாம் என, அறிவிப்பு வந்த முதல் ஆண்டு, 5,293 சேமிப்பு கணக்குகள் துவக்கப்பட்டன.கடந்த ஆண்டு வரையில், காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில், இந்தியா போஸ்ட் பேமென்ட் பேங்கில், 1.26 லட்சம் சேமிப்பு கணக்குகள் துவக்கப்பட்டு உள்ளன.கல்வி மற்றும் அஞ்சல் துறையினர் புரிந்துணர்வு ஒப்பந்தம் அடிப்படையில், அரசு மற்றும் தனியார் பள்ளிகளில், படித்து வரும் மாணவ- - மாணவியருக்கு ஜீரோ பேலன்ஸ் வங்கி கணக்கு துவக்கலாம் என, புரிந்துணர்வு ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது.இதன் மூலமாக, அஞ்சல் சேமிப்பு கணக்குகளின் எண்ணிக்கை அதிகரிக்கும் என, அஞ்சல் துறையினர் தெரிவித்தனர்.இதுகுறித்து, காஞ்சிபுரம் அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் அருள்தாஸ் கூறியதாவது:காஞ்சிபுரம் அஞ்சல் கோட்டத்தின் கீழ் செயல்படும், இந்தியா போஸ்ட் பேமென்ட் பேங்கில், 1.26 லட்சம் வங்கி கணக்குகள் துவக்கப்பட்டு உள்ளன. மாணவர்கள் கல்வித்தொகை உதவி பெறுவதற்கு சவுகரியமாக, ஜீரோ பேலன்ஸ், 21,180 வங்கி கணக்குகள் என, 1.47 லட்சம் வங்கி கணக்குகள் துவக்கப்பட்டு உள்ளன. காஞ்சிபுரம் வங்கியை காட்டிலும், திருவள்ளூர் மாவட்ட வங்கியில் அதிக அஞ்சல் கணக்கு துவக்கப்பட்டு உள்ளது குறிப்பிட தக்கது. இவ்வாறு அவர் கூறினார்.
இந்தியா போஸ்ட் பேமென்ட் சேமிப்பு கணக்கு எண்ணிக்கை:
ஆண்டு சேமிப்பு கணக்குகளின் எண்ணிக்கை2018 5,2932019 29,2932020 25,4232021 5,4492022 12,5992023 48,0222024 20,581மாணவர்கள் சேமிப்பு கணக்கு 21,180மொத்தம் 1,47,259