| ADDED : ஜூலை 20, 2024 02:42 AM
காஞ்சிபுரம் : உத்திரமேரூர் ஒன்றியம் அனுமந்தண்டலம் கிராமத்தில், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை சார்பில், 'ஸ்வச் பாரத் மிஷன்' திட்டத்தின் கீழ், 5.25 லட்சம் ரூபாய் செலவில் சமுதாய கழிப்பறை கட்டடம் கட்டப்பட்டது.கட்டுமானப் பணி முடிந்து ஓராண்டிற்கு மேலாகியும், திறப்பு விழா காணாமல் கட்டடம் வீணாகி வருகிறது. இதனால், வீட்டில் கழிப்பறை வசதி இல்லாதவர்கள், புதர் மண்டிய திறந்தவெளி பகுதியை கழிப்பறையாக பயன்படுத்த வேண்டிய அவலநிலை உள்ளது.எனவே, சமுதாய கழிப்பறையை திறக்க, உத்திரமேரூர் வட்டார வளர்ச்சி அலுவலக அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதியினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.இதுகுறித்து ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை அலுவலர் கூறியதாவது:கழிப்பறை கட்டடத்திற்கு தேவையான தண்ணீரை பூர்த்தி செய்யும் வகையில், ஆழ்துளை குழாய் அமைக்கப்பட உள்ளது. இப்பணி முடிந்ததும், சமுதாய கழிப்பறை விரைவில் பயன்பாட்டிற்கு திறக்கப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.