காஞ்சிபுரம்: சென்னை - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலை மேம்பாலங்களின் சாய்தளத்தில் இருபுறமும், சரளைக்கற்கள், மண் கொட்டி நிரப்பும் பணி துவங்கியுள்ளது.சென்னை - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில், காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதுார், சுங்குவார்சத்திரம், காஞ்சிபுரம், -பொன்னேரிக்கரை, பாலுச்செட்டிசத்திரம் உள்ளிட்ட பிரதான சந்திப்பு கடவுப்பாதைகள் உள்ளன. இங்கு, நாள்தோறும் சென்னை - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையை கடக்கும் வாகனங்களால், நெரிசல் மற்றும் வாகன விபத்துகள் ஏற்பட்டு வந்தன.விபத்தை தவிர்க்க, சென்னை - பெங்களூரு தேசிய நான்குவழிச் சாலையில் இருந்து, ஆறுவழி சாலையாகவும், 18 இடங்கள் சிறுபாலங்கள் மற்றும் மூன்று இடங்களில் மேம்பாலங்கள் அமைக்க, தேசிய நெடுஞ்சாலை துறை திட்டமிட்டது.தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் மூலமாக, 654 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்து, மூன்று பிரிவுகளாக ஒப்பந்தம் விடப்பட்டு உள்ளன.மதுரவாயல்- -- ஸ்ரீபெரும்புதுார் வரை, 23 கி.மீ., துாரம், 2022ல் பணி துவங்கி, 2024 மார்ச் மாதத்தில் முடிக்க வேண்டும்.அதேபோல, ஸ்ரீபெரும்புதுார் - -காரப்பேட்டை வரையில், 34 கி.மீ., துாரம், 2019ல் துவங்கி, 2024 டிச., முடிக்க வேண்டும். அடுத்த கட்டமாக, காரப்பேட்டை- - வாலாஜாபேட்டை வரையில், 36 கி.மீ., துாரம், 2019ல் துவங்கி, 2024 அக்டோபர் மாதம் முடிக்க வேண்டும்.கடந்த 2021ம் ஆண்டு துவங்கிய மேம்பாலங்களின் கட்டுமான பணிகள், கால அவகாசம் நெருங்கியும் முடிக்கப்படாமல் உள்ளது.குறிப்பாக, ஸ்ரீபெரும்புதுார் - -ஒரகடம் கூட்டுச் சாலையில், மேம்பாலம் கட்டுமான பணிகளை அறவே துவக்கவில்லை. இதுதவிர, சின்னையன்சத்திரம், ராஜகுளம், ஏனாத்துார் உள்ளிட்ட பல்வேறு இடங்களில், மேம்பாலம் கட்டுவதற்கு மாற்றுப்பாதை அமைத்து விட்டு, மேம்பாலங்கள் கட்டியுள்ளனர்.வாகனங்கள் ஏறி இறங்குவதற்கு ஏற்ப, சாய்தள வசதி ஏற்படுத்தவில்லை.மேலும், மேம்பாலத்தின் இருபுறமும், சாய்தளத்தின் இருபுறமும் கல் துகள்கள் கொட்டி நிரப்பி, மேம்பாலம் பணி நிறைவு செய்ய வேண்டும் என, வழிகாட்டியில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.கல் அரவை நிலையம் அமைக்கும் பணிக்கு, அரசு ஒப்புதல் கிடைக்கவில்லை. இதனால், சாலை போடும் பணியில், ஒப்பந்தம் எடுத்தவர் மேம்பாலம் அமைக்கும் பணியில் சுணக்கம் காட்டி வருகிறார்.இருப்பினும், பாலுச்செட்டிசத்திரம் மேம்பால சாய்தளத்தின் இருபுறமும், சரளைக்கற்கள் கலந்த மண்ணை கொட்டி நிரப்பப்பட்டு வருகிறது.ஏற்கனவே, கீழம்பி கடவுப்பாதை மேம்பால பணி நிறைவு பெற்று, சமீபத்தில் வாகனப் போக்கு வரத்து துவக்கப்பட்டு உள்ளது என்பது, குறிப்பிடத் தக்கது.இதன் வாயிலாக, பிரதான கடவுப்பாதை மேம்பாலங்கள் பணி புத்துயிர் பெற்றுள்ளது என, துறை அதிகாரிகள் இடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.