காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் மாநகராட்சியில், தி.மு.க.,வைச் சேர்ந்த மேயர் மகாலட்சுமி மீது அதிருப்தி கவுன்சிலர்கள் 33 பேர், நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வர வேண்டும் என, கோரிக்கை விடுத்திருந்தனர். இதுதொடர்பாக, பல்வேறு பிரச்னைகளை, கடந்த இரு மாதங்களாக கவுன்சிலர்கள் மேற்கொண்டு வந்தனர். இந்நிலையில், ஜூலை 29ல், மேயர் மகாலட்சுமி மீதான நம்பிக்கையில்லா தீர்மான கூட்டம் நடந்தது. இதில், அதிருப்தி கவுன்சிலர்கள், ஆதரவு கவுன்சிலர்கள் என, யாரும் பங்கேற்காததால் தீர்மானம் தோல்வியடைந்தது. இப்பிரச்னை ஒரு வழியாக முடிவுக்கு வந்தது. இதையடுத்து, மாநகராட்சியில் காலியாக இருந்த பணிக்குழு தலைவர் பதவிக்கு, மேயர் அதிருப்தி கவுன்சிலரான, 48வது தி.மு.க., கவுன்சிலர் கார்த்திக் போட்டியின்றி வெற்றி பெற்றார்.மாநகராட்சியில் முக்கிய பதவியான பணிக்குழு தலைவர் பதவியை, அதிருப்தி கவுன்சிலரான கார்த்திக்கிடம் கட்சி வழங்கியதால், மாநகராட்சி பிரச்னை ஓரளவு தீரும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், 'டெண்டர்' விவகாரத்தில் புதிய பிரச்னை எழுந்துள்ளதால், மாநகராட்சி நிர்வாகத்தில் மீண்டும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.மாநகராட்சி ஒப்பந்தப்புள்ளி விபரங்களை முறையாக அறிவிப்பு செய்யவில்லை என, பணிக்குழு தலைவர் கார்த்திக், காஞ்சிபுரம் மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறையிடம், மாநகராட்சி பொறியாளர் கணேசன் மீது நேற்று முன்தினம் புகார் அளித்துள்ளார். இவரது புகார் மனுவில், தி.மு.க.,- - அ.தி.மு.க., என, 17 கவுன்சிலர்களும் கையெழுத்திட்டுள்ளனர்.லஞ்ச ஒழிப்புத்துறையிடம் கவுன்சிலர் கார்த்திக் அளித்த புகாரில் மனு விபரம்:காஞ்சிபுரம் மாநகராட்சி பேருந்து நிலையத்தை சீரமைக்கும் பணிக்கு, 80 லட்சம் ரூபாய்க்கு, கடந்த 16ம் தேதி ஒப்பந்தப்புள்ளி கோரப்பட்டதாக தெரிந்துகொள்ள வந்தேன்.காஞ்சிபுரம் மாநகராட்சி தகவல் அறிவிப்பு பலகை மூலமாக எந்தவித அறிவிப்பும் செய்யப்படவில்லை. அறிவிப்பு வெளியிடாமல், தனிநபர் ஆதாயம் பெறும் வகையில், மாநகராட்சி பொறியாளர் கணேசன், மாநகராட்சிக்கு இழப்பு ஏற்படுத்தியுள்ளார்.ஒப்பந்தப்புள்ளி ரத்து செய்து, மீண்டும் ஒப்பந்தப்புள்ளி அறிவிப்பு அனைவரும் அறிந்து கொள்ளும் வகையில் வெளியிட வேண்டும். மாநகராட்சி அதிகாரிகளிடம் விசாரணை செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.