| ADDED : ஆக 18, 2024 11:51 PM
வாலாஜாபாத் : வாலாஜாபாத் ஒன்றியம், பழையசீவரம் கிராமத்தில், 300க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசிக்கின்றனர். இங்குள்ள மேட்டுத் தெரு, பிராமணர் தெரு மற்றும் ராஜவீதி உள்ளிட்ட பகுதிகளில், ஓராண்டாக குறைந்த மின் அழுத்தம் பிரச்னை உள்ளது.இதனால், இப்பகுதியில் இரவு நேரங்களில் டியூப்லைட் ஒளிராமலும், எல்.இ.டி., டி.வி.,க்கள் இயங்காமலும், மின்விசிறிகள் வேகமற்று சுழல்வது உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகள் தொடர்கிறது.இதுகுறித்து, அப்பகுதியினர் கூறியதாவது:பழையசீவரத்தில் நிலவும் மின்னழுத்த பிரச்னை குறித்து சம்பந்தப்பட்ட மின்வாரிய அதிகாரிகள் கவனத்திற்கு கொண்டு சென்றுள்ளோம்.இப்பகுதியில் உள்ள இரண்டு மின்மாற்றிகள் வாயிலாக, மின்சாரம் பிரித்து வீடுகளுக்கு மின் வினியோகம் செய்து தருவதாக கூறினர்.இதற்காக மின் கம்பங்கள் நடப்பட்டு கிடப்பில் உள்ளது. எனவே, இப்பிரச்னைக்கு விரைந்து தீர்வு காண சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்,இவ்வாறு அவர்கள் கூறினர்.