| ADDED : ஜூன் 10, 2024 05:52 AM
கூடுவாஞ்சேரி : வண்டலுார் அடுத்த கிளாம்பாக்கம் பேருந்து முனையம் எதிரில், ரயில் நிலையத்தை ஒட்டி பழைய இரும்பு கடை மற்றும் பிளாஸ்டிக் மறுசுழற்சி கடை, வெல்டிங் கடை உள்ளிட்டவை உள்ளன.நேற்று மதியம் 12:00 மணியளவில், பிளாஸ்டிக் கடையில் தீ விபத்து ஏற்பட்டது. குபுகுபுவென கரும்புகை வெளியேறியது. தகவலறிந்து, கிளாம்பாக்கம் போலீசார், மறைமலை நகர் தீயணைப்பு துறையினர் வந்து தீ மேலும் பரவாமல், கட்டுக்குள் கொண்டுவர முயற்சித்தனர்.ஆனால், அதற்குள் தீ அருகில் இருந்த கடைகளுக்கும் பரவி, அதிக அளவில் கரும்புகை வெளியேறியது. இதனால், ஜி.எஸ்.டி., சாலை முழுதும் புகை மூட்டமாக காணப்பட்டது. சுற்றுவட்டார பகுதி மக்கள் மூச்சுத்திணறலால் பாதிக்கப்பட்டனர்.வாகனங்களில் சென்றோர் கண் எரிச்சலால் அவதிக்குள்ளாகினர். தொடர்ந்து, தீ மளமளவென எரிந்ததால், தாம்பரம் மற்றும் கேளம்பாக்கம் பகுதிகளில் இருந்து, தீயணைப்பு துறையினர் வரவழைக்கப்பட்டனர். அவர்கள், இரண்டு மணி நேரம் போராடி தீயை அணைத்தனர்.முதற்கட்ட விசாரணையில், மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டது தெரிய வந்தது.