| ADDED : ஜூலை 04, 2024 12:13 AM
காஞ்சிபுரம்:ஆந்திர மாநிலத்தில், ராஜமுந்திரி, கடப்பா உள்ளிட்ட வட்டாரங்களில் குண்டுரக நாவல் பழம் அதிகளவு பயிரிடப்படுகிறது. தற்போது, ஆந்திரா மாநிலத்தில் குண்டுரக நாவல் பழம் சீசன் துவங்கியுள்ளதால், காஞ்சிபுரம் வீதிகளில், நடமாடும் வாகனங்களில், கிலோ நாவல் பழம், 200 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.இதுகுறித்து காஞ்சிபுரத்தைச் சேர்ந்த நாவல் பழ வியாபாரி எஸ்.சாதிக்பாட்ஷா கூறியதாவது:ஆந்திராவில் விளையும் குண்டுரக நாவல் பழம், உள்ளூரில் விளையும் நாட்டு பழத்தைவிட அளவில் சற்று பெரிதாக இருக்கும். ஆந்திராவில் இருந்து தமிழகத்திற்கு வரத்து அதிகரித்துள்ளதால், 250 கிராம் நாவல் பழம் 50 ரூபாய்க்கும், கிலோ 200 ரூபாய்க்கும் விற்பனை செய்கிறேன். பல்வேறு மருத்துவ குணம் அதிகம் கொண்ட இப்பழத்தை ரத்த அழுத்தம், சர்க்கரை நோயாளிகள் விரும்பி வாங்கிச் செல்கின்றனர்.கடந்த மாதம் இப்பழம், 250 கிராம் 100 ரூபாய்க்கும், கிலோ 400 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டது. அடுத்த மாதம் விளைச்சல் குறைய ஆரம்பிக்கும். அப்போது விலை உயரும் வாய்ப்பு உள்ளது. அடுத்து உள்ளூரில் விளையும் நாட்டு ரக நாவல் பழம் சீசன் துவங்கும்.இவ்வாறு அவர் கூறினார்.