| ADDED : ஏப் 17, 2024 10:35 PM
காஞ்சிபுரம்:தமிழகத்தில் லோக்சபா தேர்தல் நாளை நடைபெறுகிறது. காஞ்சிபுரம் லோக்சபா தொகுதியில் 8,53,456 ஆண் வாக்காளர்களும், 8,95,107 பெண் வாக்காளர்களும், 303 திருநங்கையர் என, மொத்தம் 17 லட்சத்து, 48 ஆயிரத்து 866 வாக்காளர்கள் உள்ளனர்.காஞ்சிபுரம் சட்டசபை தொகுதிக்கு உட்பட்ட பகுதியில் 303 ஓட்டுச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. இதில், காஞ்சிபுரம் மாநகராட்சியில் உள்ள 51 வார்டுகளில் மட்டும், 219 ஓட்டுச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த ஓட்டுச்சாவடிகளில் உள்ள அடிப்படை வசதிகள் குறித்து காஞ்சிபுரம் மாநகராட்சி தேர்தல் அலுவலர்கள் நேற்று ஆய்வு செய்தனர்.இதில், ஓட்டுச்சாவடியில் மின் இணைப்பு சரியாக உள்ளதா, மின்விசிறி, மின்விளக்குகள் சரியாக இயங்குகிறதா, கழிப்பறை தண்ணீர் வசதியுடன் சுகாதாரமாக உள்ளதா, ஓட்டுச்சாவடி அலுவலர்கள், பூத் ஏஜன்டுகள் அமரும் வகையில் டேபிள், சேர் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் சரியாக உள்ளதா என, ஆய்வு செய்தனர்.இதில், ஒரு சில குறைபாடு உள்ள ஓட்டுச்சாவடிகளில், குறையை உடனே சரி செய்ய மாநகராட்சி ஊழியர்களிடமும், மின்வாரிய ஊழியர்களிடமும் அறிவுறுத்தினர்.