| ADDED : மே 30, 2024 12:08 AM
உத்திரமேரூர்:உத்திரமேரூர் வட்டாரத்தில், பொருளாதார ரீதியாக மிகவும் பின்தங்கிய இருளர்கள், நீர்நிலை உள்ளிட்ட புறம்போக்கு நிலங்களில் ஓலை குடிசைகளில் வசித்து வருகின்றனர். பேரிடர் காலங்களில் இவர்கள் மிகவும் சிரமம் அடைகின்றனர்.இதை தவிர்க்க அரசு சார்பில், இருளர்களுக்கு மனை பட்டா மற்றும் கான்கிரீட் வீடுகள் கட்டி தரப்படுகின்றன. அதன்படி, பழவேரி கிராமத்தில், 2024- - 25ம் ஆண்டு, 'ஜல்மன்' திட்டத்தின் கீழ், 20 குடும்பங்களுக்கு, மனை பட்டா வழங்கி ஒவ்வொரு குடும்பத்திற்கும் தலா 5.7 லட்சம் ரூபாய் செலவில் வீடு கட்டுமான பணி மேற்கொள்ளப்படுகிறது.இப்பணிகளின் தரம் குறித்து மாவட்ட திட்ட இயக்குனர் செல்வகுமார் தலைமையிலான அதிகாரிகள் நேற்று அப்பகுதியில் ஆய்வு செய்தனர். வீட்டு அளவுகள் சரி பார்க்கப்பட்டு, கட்டுமான பணிக்கு பயன்படுத்தப்படும் ஹாலோ பிளாக் கற்களின் அளவு மற்றும் உயரம், எடை போன்றவற்றை ஆய்வு செய்தனர்.தரமான மணல், போதுமான சிமென்ட் கலவை பயன்படுத்தப்படுகிறதா என்பன குறித்து, வீடுகளின் உரிமையாளர்களிடத்தில் கேட்டறிந்தனர். பணிகளை தரமான முறையில் விரைந்து முடிக்க ஒப்பந்ததாரர்களிடத்தில் அறிவுறுத்தப்பட்டது.உத்திரமேரூர் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் பாலாஜி, பவானி உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.