| ADDED : ஜூன் 01, 2024 06:04 AM
கிண்டி, : எழும்பூர், காவல் துறை கட்டுப்பாட்டு அறை தொலைபேசிக்கு, நேற்று முன்தினம் இரவு ஒரு அழைப்பு வந்தது.அதில் பேசிய நபர், கிண்டியில் உள்ள தமிழக கவர்னர் மாளிகையில் வெடிகுண்டு வைக்கப்பட்டிருப்பதாகவும், சிறிது நேரத்தில் அது வெடிக்கும் எனவும் கூறி, இணைப்பை துண்டித்தார்.இதையடுத்து, கவர்னர் மாளிகையில் வெடிகுண்டு பிரிவு போலீசார், மெட்டல் டிடெக்டர், மோப்ப நாய் உதவியுடன் சோதனை நடத்தினர்.பல மணி நேரம் நடத்திய சோதனையில் வெடி பொருள் எதுவும் கண்டறியப்படவில்லை. வதந்தியை பரப்பும் நோக்கத்துடன் தொலைபேசி அழைப்பு வந்திருப்பது தெரியவந்தது.இது தொடர்பாக வழக்கு பதிந்த சென்னை சைபர் குற்றப்பிரிவு போலீசாரின் விசாரணையில், வெடிகுண்டு மிரட்டல் விடுத்த மொபைல்போன் எண், கள்ளக்குறிச்சி, எலவனசூர்கோட்டை பகுதியைச் சேர்ந்த தேவராஜ் என்பது தெரியவந்தது. கள்ளக்குறிச்சி போலீசார், தேவராஜை பிடித்தனர்.விசாரணையில் அவர், மனநலம் பாதிக்கப்பட்டவர் என தெரியவந்தது. இருப்பினும், அவரின் உறவினர்களிடம் தொடர்ந்து விசாரிக்கின்றனர்.