காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாக மக்கள் நல்லுறவு மைய கூட்டரங்கில், 'மக்களுடன் முதல்வர்' திட்ட சிறப்பு முகாம்களில் மனுக்கள் பெறும் அலுவலர்களுக்கான பயிற்சி வகுப்பு, காஞ்சிபுரம் கலெக்டர் கலைச்செல்வி தலைமையில் நடந்தது.காஞ்சிபுரம் மாவட்டத்தில், 'மக்களுடன் முதல்வர்' என்ற திட்டத்தில் நகர்ப்புற பகுதிகளில் முதற்கட்டமாக மாநகராட்சியில் 8 முகாம், நகராட்சியில் 4 முகாம், பேரூராட்சியில் 3 முகாம், நகர்ப்புறத்தினை ஒட்டியுள்ள கிராம ஊராட்சிகளில், 15 முகாம் என, 30 முகாம் நடத்தி முடிக்கப்பட்டது.இதை தொடர்ந்து ஊராட்சி பகுதிகளில் இரண்டாம் கட்டமாக முகாம்கள் நடத்தப்பட உள்ளன. தமிழக முதல்வரால், ஜூலை 11ம் தேதி இத்திட்டம் துவக்கப்பட உள்ளதால், காஞ்சிபுரம் மாவட்டத்தில், குன்றத்துார் வட்டம், கோவூர் ஊராட்சியில் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் அன்பரசன் தலைமையில் முகாம் நடைபெற உள்ளது.மேலும், 256 கிராம ஊராட்சிகளில் 54 முகாம்கள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இம்முகாம் தொடர்பாக ஆலோசனை கூட்டம் ஊரக வளர்ச்சி முகமை கூட்டரங்கில் காஞ்சிபுரம் கலெக்டர் கலைச்செல்வி தலைமையில், முதல் நிலை அலுவலர்களுடன் ஜூன் 27ம் தேதி நடந்தது.அதை தொடர்ந்து, முகாம்களில் மனுக்களை பெறும் அலுவலர்களுக்கு ஜூன் 28, ஜூலை 2 ஆகிய நாட்களில் பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டன.ஊராட்சி பகுதிகளில், ஜூலை 11 முதல், 22ம் தேதி வரை, 54 முகாம்கள், 256 கிராம ஊராட்சிகளில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.பொது மக்கள் இம்முகாம்களை பயன்படுத்தி உரிய ஆவணங்களுடன் மனு செய்து பயனடையலாம் என, காஞ்சிபுரம் கலெக்டர் கலைச்செல்வி தெரிவித்துள்ளார்.