காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் மின் பகிர்மான வட்டத்தில், காஞ்சிபுரம் வடக்கு, காஞ்சிபுரம் தெற்கு, திருத்தணி, திருவள்ளூர் ஆகிய நான்கு மின் கோட்டங்கள் உள்ளன. இதில், 50க்கும் மேற்பட்ட துணை மின் நிலையங்கள் உள்ளன. துணை மின் நிலையங்கள்தோறும், மின் வாரிய கட்டணம் வசூலிக்கும் மையம் ஏற்படுத்தி உள்ளது.இதுதவிர, மின் நுகர்வோர் தங்களின் மின் இணைப்பு எண்ணை பயன்படுத்தி, கனிணி சேவை மையங்களில் மின் கட்டணம் செலுத்தி வருகின்றனர்.மூன்று ஆண்டுகளுக்கு முன், 10,000 ரூபாய் மேல் மின் கட்டணம் செலுத்துவோர் காசோலை மற்றும் கேட்பு காசோலை வாயிலாக செலுத்தி வந்தனர்.ஒரு வாரமாக, காஞ்சிபுரம் மின் பகிர்மான வட்டத்தில் இருக்கும் அனைத்து துணை மின் நிலைய கட்டணம் வசூலிக்கும் மையங்களில், 5,000 ரூபாய்க்கு மேல் மின் கட்டணம் செலுத்துவோர், பணமாக செலுத்த முடியாது. அதற்கு பதிலாக, காசோலையாக செலுத்த வேண்டும் என, கட்டுப்பாடு பிறப்பிக்கப்பட்டு உள்ளது.இதை, மின் பயனாளிகளுக்கு தெரியும்படி மின் வாரிய அதிகாரிகள் அச்சடித்து ஒட்டி உள்ளனர். மேலும், சமூக வலை தளங்களில் பதிவேற்றம் செய்துள்ளனர்.இதுகுறித்து, காஞ்சிபுரம் மின் பகிர்மான வட்ட அதிகாரி ஒருவர் கூறுகையில், ‛மின் கட்டணம் வசூலிக்கும் மையங்களில், 5,000 ரூபாய் குறைவாக இருப்போரிடம் மட்டும் மின் கட்டணம் பணமாக வசூலிக்கப்படும். அதற்கு மேல் மின் கட்டணம் செலுத்துவோர் காசோலையாகவோ அல்லது ஆன்லைன் வழியாகவோ செலுத்தலாம்.' என்றார்.